இலங்கைக்கு 134 ரோந்து வாகனங்கள்: இந்தியா வழங்கியது
கொழும்பு: சட்டம் ஒழுங்கை மேம்படுத்துவதற்கு உதவும் வகையில், இலங்கை போலீசாருக்கு 134 ரோந்து வாகனங்களை இந்தியா மானிய விலையில் வழங்கியுள்ளது.
நம் அண்டை நாடான இலங்கையின் அதிபர் அனுரா குமார திசநாயகே, 2024 டிச.,ல் இந்தியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டிருந்தார். இப்பயணத்தின் போது, இரு நாடுகளுக்கு இடையேயான பன்முக வளர்ச்சி கூட்டாண்மையின் அடிப்படையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில், இலங்கையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு மானிய உதவியின் கீழ் ரோந்து வாகனங்கள் வழங்கும் திட்டமும் அடங்கும்.
இதன்படி, 8.82 கோடி ரூபாய் மதிப்புள்ள, 134 வாகனங்களை ஒப்படைக்கும் விழா இலங்கையின் கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையில் நடந்தது. இதில் பங்கேற்ற இலங்கைக்கான இந்திய துாதர் சந்தோஷ் ஜா, வாகனங்களை அந்நாட்டு போலீஸ் உயரதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
இவ்விழாவில் அந்நாட்டு அதிபர் அனுரா குமார திசநாயக, ராணுவ அமைச்சர் ஆனந்த விஜேபால உள்ளிட்டோர் பங்கேற்றனர்.