17 வயது கிரிக்கெட் வீரர் தாக்கி இலங்கை பயிற்சியாளர் மரணம்.. தண்ணீர் வராததால் ஏற்பட்ட தகராறால் சோகம்
17 வயது கிரிக்கெட் வீரர் தாக்கி இலங்கை பயிற்சியாளர் மரணம்.. தண்ணீர் வராததால் ஏற்பட்ட தகராறால் சோகம்
கொழும்பு: இலங்கையை சேர்ந்த 62 வயது கிரிக்கெட் பயிற்சியாளர் சுமித் பெர்னாண்டோ கொழும்பில் நடைபெற்ற ஒரு கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த ஆகஸ்ட் 8 அன்று, கிரிக்கெட் மைதானத்தில் குடிநீர் குடிப்பது தொடர்பாக வீரர்களுக்கும் மைதான ஊழியருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மைதானத்தில் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த வீரர்கள் தண்ணீர் குழாய்க்குச் சென்றபோது தண்ணீர் வரவில்லை. இதனால் வீரர்களுக்கும், அங்கிருந்த ஊழியருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் முற்றியுள்ளது. இந்த மோதலின் போது, சீதுவா பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி கிரிக்கெட் வீரர் பயிற்சியாளர் சுமித் பெர்னாண்டோவை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால் பலத்த காயமடைந்த பயிற்சியாளர் உடனடியாக கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக அந்த 17 வயது பள்ளி கிரிக்கெட் வீரரை போலீஸார் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் அவர் ஆகஸ்ட் 17 வரை சிறுவர் சீர்திருத்தக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மறைந்த சுமித் பெர்னாண்டோ, இலங்கை பள்ளி கிரிக்கெட் வட்டாரத்தில் மிகவும் மதிக்கப்படும் ஒரு பயிற்சியாளர் ஆவார். மொரட்டுவாவில் உள்ள பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் கல்லூரியின் முன்னாள் பயிற்சியாளரான இவர், இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் குசல் மெண்டிஸ் உட்பட பல முன்னணி வீரர்களுக்கு அவர்களின் பள்ளி பருவத்தில் பயிற்சி அளித்துள்ளார். பின்னர், ப்ளூம்ஃபீல்ட் கிரிக்கெட் கிளப்பின் கியூரேட்டராகவும் அவர் பணியாற்றினார்.
மறைந்த பயிற்சியாளர் சுமித் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை நடைபெற்றன. குடிநீர் தகராறில் பள்ளி வீரர் தாக்கியதில் ஒரு மூத்த பயிற்சியாளர் உயிரிழந்த சம்பவம் இலங்கை கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் நிலையில் இந்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது.