18 வயதில் வரலாற்றுச் சாதனை படைத்த அனாஹத் சிங்.. ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்று அசத்தல்
18 வயதில் வரலாற்றுச் சாதனை படைத்த அனாஹத் சிங்.. ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்று அசத்தல்
நகோயா: ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஸ்குவாஷ் விளையாட்டில் இந்தியாவின் 18 வயது இளம் வீராங்கனை அனாஹத் சிங் வெள்ளிப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். ஆசிய விளையாட்டு மகளிர் ஒற்றையர் ஸ்குவாஷ் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.
தங்கப் பதக்கத்துக்கான இறுதி ஆட்டத்தில், உலகின் 4-ம் நிலை வீராங்கனையான மலேசியாவின் சிவசங்கரி சுப்ரமணியத்தை அனாஹத் சிங் எதிர்கொண்டார். சிவசங்கரி சுப்ரமணியம் பூர்வீக தமிழர் ஆவார். மலேசியாவின் முன்னணி ஸ்குவாஷ் வீராங்கனையான அவரை வெல்வது கடினம் என்ற நிலையில் அனாஹத் இந்த இறுதிப் போட்டியில் பங்கேற்றார்.
ஆட்டத்தின் தொடக்கத்தில் அனாஹத் 3-2 என முன்னிலை பெற்று நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் நடப்பு சாம்பியனான மலேசிய வீராங்கனை சிவசங்கரி அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி புள்ளிகளைக் குவித்தார். அனாஹத்தின் எதிர்பாராத தவறுகளைப் பயன்படுத்திய சிவசங்கரி, முதல் கேமை 11-4 என்ற கணக்கில் எளிதாகக் கைப்பற்றினார்.
தொடர்ந்து நடைபெற்ற 2-வது கேமிலும் தனது முழு ஆதிக்கத்தைச் செலுத்திய சிவசங்கரி 11-4 என்ற கணக்கில் வென்று தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். அனுபவ வீராங்கனைக்கு எதிராகப் போராடி வீழ்ந்த போதிலும், அனாஹத் சிங் தனது 18-வது வயதிலேயே வெள்ளிப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்தார்.
முன்னதாக நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், உலகின் 6-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் சடோமி வதானபேயை வீழ்த்தி அனாஹத் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார்.
ஸ்குவாஷ் விளையாட்டில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அபய் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து, மகளிர் ஒற்றையர் பிரிவிலும் அனாஹத் சிங் வெள்ளிப் பதக்கத்தை வென்று இந்திய ஸ்குவாஷ் அரங்கில் புதிய சகாப்தத்தைப் படைத்துள்ளார்.