2 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார்
2 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார்
சென்னை: தமிழக சட்டப்பேரவை 2 நாள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் கூடுகிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் முடிந்து பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது. புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டம் கடந்த 18ம் தேதி தொடங்கியது.
முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்கியது. அன்றைய தினம் ஆளுநர் அர்லேகர் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து 19ம் தேதி 2வது நாள் கூட்டம் நடந்தது. அப்போது முதல்வர் விஜய், காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசினர் தனித் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். இந்த தீர்மானம் திமுக, அதிமுக உள்பட அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.
தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. இதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினர். காரசாரமான விவாதம் நடைபெற்றது. அதன் பிறகு சனி, ஞாயிறு என்று இரண்டு நாட்கள் பேரவைக்கு விடுமுறை விடப்பட்டது. 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும். இதில் உறுப்பினர்கள் பேசுவார்கள்.
குறிப்பாக இன்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சிகளின் தலைவர்கள் பேச உள்ளனர். இறுதியாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுவார். இன்று முக்கிய தலைவர்கள் பேச உள்ளதால் சட்டப்பேரவையில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. நாளை (செவ்வாய்க்கிழமை) இறுதி நாள் கூட்டம் நடக்கிறது. இதில் முதல்வர் விஜய், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் உறுப்பினர்கள் பேசியதற்கு பதில் அளித்து பேசுவார். அப்போது அவர் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் இன்று முதல்வர் விஜய் பிறந்த நாள் ஆகும். தற்போது, சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் நிலையில், சட்டசபையில் இன்று அவருக்கு சபாநாயகர், அமைச்சர்கள், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாழ்த்து கூற இருக்கிறார்கள். முதல்வராக பொறுப்பேற்று முதல் பிறந்த நாளை கொண்டாடும் விஜய் சட்டசபையில் இன்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது என்ன அறிவிப்பு என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
\n ${e.display_status||e.scheduleTime}\n
\n ${e.display_status+", "+e.scheduleTime}\n