2027 உலகக்கோப்பை அணியில் பண்ட், ஷமி எல்லாம் தேவை இல்லை.. ஆனா 36 வயது பவுலர் வேணும்.. அஸ்வின் தேர்வு
2027 உலகக்கோப்பை அணியில் பண்ட், ஷமி எல்லாம் தேவை இல்லை.. ஆனா 36 வயது பவுலர் வேணும்.. அஸ்வின் தேர்வு
சென்னை: 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடருக்கான தனது உத்தேச இந்திய அணியை முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்துள்ளார். இதில் ரிஷப் பண்ட், முகமது ஷமி போன்ற முன்னணி வீரர்களை அவர் புறக்கணித்துள்ளார்.
அஸ்வின் வெளியிட்டுள்ள பட்டியலில் ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், முகமது ஷமி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு இடமில்லை. அதேபோல், இளம் வீரர்களான வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, சிவம் துபே மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோரும் அணியில் இடம் பெற வாய்ப்பில்லை என்று அவர் கூறியுள்ளார். யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, அர்ஷ்தீப் சிங் ஆகியோரை 'ஒருவேளை வாய்ப்பு கிடைக்கலாம்' என்ற பிரிவில் வைத்துள்ளார்.
மறுபுறம் ரோஹித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் உலகக்கோப்பை அணியில் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என்று அஸ்வின் கூறினார். விக்கெட் கீப்பர் இடத்திற்கு கே.எல். ராகுலுடன் சேர்த்து, இரண்டாவது கீப்பராக இஷான் கிஷனை அவர் தேர்வு செய்துள்ளார்.
அஸ்வின் தேர்வு செய்த அணியில் மிகப்பெரிய ஆச்சரியமாக அமைந்தது மூத்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமாரின் தேர்வுதான். கடந்த 2022 ஜனவரிக்குப் பிறகு இந்தியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடாத புவனேஸ்வரை அஸ்வின் தேர்வு செய்துள்ளார். தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெறவுள்ள உலகக்கோப்பைக்கு புவனேஸ்வரின் அனுபவம் இந்திய அணிக்கு மிகவும் தேவைப்படும் என்று அஸ்வின் கூறினார். இதற்காக அவர் ரஞ்சி கோப்பை மற்றும் விஜய் ஹசாரே போன்ற அனைத்து உள்ளூர் போட்டிகளிலும் விளையாடி உடற்தகுதியைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் யோசனை கூறி உள்ளார்.
தற்போது 36 வயதாகும் புவனேஸ்வர் குமார், 2026 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி 16 போட்டிகளில் 28 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆர்சிபி அணி மீண்டும் கோப்பையை வெல்லவும் முக்கிய பங்காற்றினார். அவர் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 2-வது இடம் பிடித்தார்.