2027 உலகக்கோப்பையை ஜெயிக்க இதைவிட சிறந்த அணி இருக்க முடியாது.. வாசிம் ஜாஃபர் சொன்ன பிளேயிங் 11
2027 உலகக்கோப்பையை ஜெயிக்க இதைவிட சிறந்த அணி இருக்க முடியாது.. வாசிம் ஜாஃபர் சொன்ன பிளேயிங் 11
மும்பை: 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் போட்டி உலகக்கோப்பைத் தொடருக்கான இந்திய அணியை முன்னாள் தொடக்க வீரர் வாசிம் ஜாஃபர் தேர்வு செய்துள்ளார். அனுபவ வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருடன் நீண்ட காலமாக இந்திய வாய்ப்பு இல்லாமல் இருக்கும் ஒரு மூத்த பந்துவீச்சாளரையும் தேர்வு செய்துள்ளார். 2027 உலகக்கோப்பையை வெல்ல அனுபவ வீரர்கள் தான் சரியான தேர்வு என்ற அடிப்படையில் வாசிம் ஜாஃபர் தனது பிளேயிங் லெவனை தேர்வு செய்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ள 2027 ஒருநாள் உலகக்கோப்பைக்கு இப்போதே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்நிலையில், வாசிம் ஜாஃபர் தேர்வு செய்துள்ள இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோரைத் தொடக்க வீரர்களாகக் களமிறக்கியுள்ளார். மேலும், 3வது இடத்தில் விராட் கோலியையும், 4வது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயரையும் தேர்வு செய்துள்ளார்.
விக்கெட் கீப்பராக கே.எல்.ராகுலை 5வது இடத்திலும், ஆல்-ரவுண்டராக ஹர்திக் பாண்டியாவை 6வது இடத்திலும் அவர் வைத்துள்ளார். சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக அக்சர் படேலையும், முதன்மை சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவையும் தேர்வு செய்துள்ளார்.
வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ராவுடன் மீண்டும் முகமது ஷமியை ஜோடி சேர்த்துள்ளார். முகமது ஷமி கடந்த 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு இந்திய அணியில் விளையாடவில்லை என்றாலும், 2023 உலகக்கோப்பையில் பும்ரா-ஷமி ஜோடி ஏற்படுத்திய தாக்கத்தை மனதில் கொண்டு ஜாஃபர் இந்த முடிவை எடுத்துள்ளார். 3வது வேகப்பந்து வீச்சாளராக முகமது சிராஜ் அணியில் உள்ளார். முழுக்க முழுக்க இளம் வீரர்களை மட்டுமே நம்பாமல், பெரிய தொடர்களில் தங்களை நிரூபித்த அனுபவ வீரர்களுக்கே ஜாஃபர் முன்னுரிமை கொடுத்துள்ளார்.
வாசிம் ஜாஃபர் தேர்வு செய்த இந்திய உலகக்கோப்பை அணி: ரோஹித் சர்மா, சுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்.