📅 Monday, 03 August 2026 IST | ஆடி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 02, 2026 08:30 PM

 23 ஆண்டுக்கு பிறகு கிடைத்த மகன் தமிழ் பேச முடியாததால் தாய் தவிப்பு

 23 ஆண்டுக்கு பிறகு கிடைத்த மகன் தமிழ் பேச முடியாததால் தாய் தவிப்பு

கோவை: 16 வயதில் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய பிரகாஷ், 23 ஆண்டுகளுக்கு பிறகு தாயின் அரவணைப்புக்கு திரும்பியுள்ளார். ஆனால், அத்தனை ஆண்டுகள் தமிழ் பேசாத சூழலில் கொத்தடிமையாக வாழ்ந்ததால், அவரால் இப்போது தமிழ் பேச முடியவில்லை.

கலெக்டர் மூலமாக சமூக ஆர்வலர் முத்தையா எடுத்த முயற்சியின் பலனாக தாயுடன் சேர்ந்த பிரகாஷை, நீலாம்பூரில் நேற்று சந்தித்தோம்.

''சின்ன பையனா பார்த்தவன் 39 வயசு மனுசனா நின்னத பாத்ததும் எனக்கு மூச்சே நின்ன மாதிரி ஆயிருச்சு. கட்டி பிடிச்சு அழுதேன். அம்மா… அம்மானு மட்டும் சொன்னான். அதுக்கு மேல பேச்சு வரல...” என்று கலங்கிய கண்களுடன் சொன்னார் சுந்தரி. “ரொம்ப காலமா அடிமை வாழ்க்கை. யாரோடயும் எந்த மொழியிலயும் பேச முடியாத சூழல். மனசுல நிறைய இருக்கு. வார்த்தைல சொல்ல முடியாம தவிக்கிறான். அழாதே அம்மானு கூட சொல்ல தெரியாம, என் கண்ணீரை கையால துடைச்சான். நாங்க பேசுறதை புரிஞ்சுக்கிறான். கேள்வி கேட்டா கவனிக்கிறான். ஆனா பதில் சொல்ல ரொம்ப திணறிட்டு இருக்கான்,'' எனகண்ணீர் விட்டார்.

சுந்தரியுடன் நமது நிருபர் பேசிக் கொண்டிருந்தபோது, பிரகாஷ் அருகில் தான் இருந்தார். ஆனால், உரையாடலை அவர் புரிந்து கொண்டாரா என்பதை கூட நம்மால் உணர முடியவில்லை. அவர் முகத்தில் எந்த சலனமும் இல்லை.

கடுமையான மன உளைச்சல் இருக்கலாம். தொடர்ந்து கவுன்சிலிங் கொடுத்தால் ஒருவேளை இயல்பு நிலைக்கு திரும்பலாம்.

அமைச்சர் சம்பத்குமார், கலெக்டர் பவன்குமார், சூலூர் எம்.எல்.ஏ. சுகுமார் என்று பலரும் பிரகாஷை பார்த்தும், சுந்தரிக்கு ஆறுதல் கூறியும் திரும்புகின்றனர். கவுன்சிலிங் கொடுக்க அவர்கள் ஏற்பாடு செய்வார்கள் என்று நம்பலாம்.

ஏனெனில், பிரகாஷிடம் ஆதார் அட்டை, பிறப்புசான்றிதழ் போன்ற எந்த அடையாள ஆவணங்களும் இல்லாததால், உடனே மாற்று ஏற்பாடு செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.