3.70 லட்சம் மின் இணைப்புகளுக்கு அதிக கட்டணம்: கள ஆய்வு செய்ய உத்தரவு
சென்னை:தமிழகத்தில் வீடுகளுக்கு மே மாதத்தை விட ஜூலையில் அதிகளவில் மின் கட்டணம் வந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து கள ஆய்வு செய்து வரும் ஆக., 7 ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க மின்சார வாரிய தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
மே மாதத்தை விட ஜூலை மாதம் 3.70 லட்சம் மின் இணைப்புகளுக்கு அதிக கட்டணம் வந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில், மின்சார வாரியத் தலைவர் அருண் ராய், மின்வாரிய அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஜூலை மாதம் அதிக மின்கட்டணம் வந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து மூத்த அதிகாரிகள் வாயிலாக அதனை மறுஆய்வு செய்ய மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது.
தலைமை பொறியாளர் -25
கண்காணிப்பு பொறியாளர் -50
நிர்வாக பொறியாளர் -75
இணை நிதி கட்டுப்பாட்டு அதிகாரி -50
துணை நிர்வாக பொறியாளர் -100
கணக்கு அதிகாரி மற்றும் வருவாய் புலனாய்வு பிரிவு -150
மூத்த கணக்கீடு அதிகாரி -150
துணை கணக்கு அதிகாரி/ வருவாய் பிரிவு -100
கணக்கீட்டு அதிகாரி-150
கணக்கீட்டு பொறியாளர் -100 இணைப்புகளை ஆய்வு செய்ய வேண்டும்.
அதிக மின் கட்டணம் வந்ததாக புகாருக்கு உள்ளான 3.70 லட்சம் இணைப்புகளை கள ஆய்வை ஆக., 7 ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். அதில் தவறு ஏதும் கண்டுபிடிக்கப்பட்டால் அதனை சரி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதனால், கட்டணம் குறைய வாய்ப்பு உள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.