📅 Tuesday, 18 August 2026 IST | ஆவணி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 19, 2026 06:30 PM

5-வது உலகத் தமிழ் மாநாடு: பெரியார் தோரண வாயில் இடித்து அகற்றம்

5-வது உலகத் தமிழ் மாநாடு: பெரியார் தோரண வாயில் இடித்து அகற்றம்

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலக தமிழ் மாநாட்டை முன்னிட்டு 1981-ம் ஆண்டு ஜனவரி 4-ந்தேதி மதுரை மாநகரின் நுழைவாயில் பகுதிகளான மாட்டுத்தாவணி, கே.கே.நகர், வில்லாபுரம், பசுமலை ஆகிய இடங்களில் பிரமாண்ட தோரண நுழைவாயில் கட்டப்பட்டது.

தற்போது மாநகர பகுதிகளில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்பட சாலைகள் விரிவாக்க பணிகள் ஆங்காங்கே மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே நெருக்கடியை தவிர்க்கும் விதமாக மதுரை மாட்டுத்தாவணி மற்றும் கே.கே.நகர் பகுதியில் உள்ள தோரண நுழைவாயில் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகவும், மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள நக்கீரர் மற்றும் கே.கே.நகர் பகுதியில் உள்ள பெரியார் தோரண நுழைவாயில் ஆகியவற்றை அகற்றவேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு மேற்கண்ட 2 தோரண நுழைவாயில்களையும் இடிக்க அகற்ற உத்தரவிட்டது. மேலும், தேவைப்படும் பட்சத்தில் பெரிய அளவிலான போக்குவரத்து இடையூறு இல்லாமல் தோரண நுழைவாயில்கள் கட்டிக் கொள்ளலாம் என கடந்த ஆண்டு உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து ஐகோர்ட்டு உத்தரவுப்படி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ந்தேதி மாட்டுத்தாவணி சாலை நடுவே இருந்த நக்கீரர் தோரண வாயில் இடித்து அகற்றப்பட்டது. அப்போது தோரண வாயில் இடிந்து பொக்லைன் ஆப்ரேட்டர் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து நேற்று இரவு கோர்ட்டு உத்தரவுப்படி மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள பெரியார் தோரண நுழைவாயில் இடிக்கும் பணி நடைபெற்றது.

பொக்லைன் மற்றும் ஜே.சி.பி. எந்திரங்கள் உதவியுடன் தோரணவாயில் இடிக்கும் பணி பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. விபத்து நிகழ்ந்துவிடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அதன் ஒரு பகுதியாக அந்த பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டது. காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்ட பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் முன்னிலையில் பெரியார் தோரணவாயில் இடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.

மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றபோது அமைக்கப்பட்ட நக்கீரர் மற்றும் பெரியார் தோரண வாயில் கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்ட நிலையில் மதுரை மாநகரின் பிரதான சாலை பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக அமைந்துள்ள வில்லாபுரம் மற்றும் பசுமலை பகுதியில் உள்ள தோரண வாயில்களும் அகற்றப்பட்டு புதிய தோரண வாயில்கள் போக்குவரத்து இடையூறின்றி அமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.