📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 16, 2026 04:34 PM

9

9

புதுடெல்லி: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 9-ம் வகுப்பில் மூன்றாவது மொழியை அறிமுகப்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ள உச்ச நீதிமன்றம், இது பொதுத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவஹர் நவோதயா வித்யாலயாக்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 16) விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஜவஹர் வித்யாலயாக்களை தமிழக அரசு எதிர்க்கக் காரணம் அதில் மும்மொழி திட்டம் இருப்பதுதான்” என்று வாதிட்டார். அதற்கு பதில் அளித்த நீதிபதி நாகரத்னா, ”மாநில மொழி கற்பிக்கப்பட வேண்டும், ஆங்கிலம் கற்பிக்கப்பட வேண்டும், மற்றும் ஏதேனும் ஒரு மொழி கற்பிக்கப்பட வேண்டும். இதில், இந்தி என குறிப்பிடப்படவில்லை.” என்று தெரிவித்தார்.

இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த தன்னார்வ தொண்டு நிறுவன வழக்கறிஞர் பிரியதர்ஷினி, “எந்த ஒரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படக்கூடாது என்று தேசியக் கல்விக் கொள்கை தெளிவாகக் கூறுகிறது.” என்று வாதிட்டார்.

அப்போது நீதிபதி நாகரத்னா, “உங்களுக்கு இந்தி வேண்டாம், ஆனால் அது சமஸ்கிருதமாக இருந்தால் என்ன பிரச்சினை?” என்று மாநில அரசிடம் கேள்வி எழுப்பினார்.

அப்போது அதற்குப் பதில் அளித்த தமிழக அரசு வழக்கறிஞர், “மூன்றாவது மொழி 9-ம் வகுப்பில் இருந்து மட்டுமே கட்டாயமாக்கப்படுகிறது” என தெரிவித்தார்.

அதற்கு நீதிபதி நாகரத்னா, “இது மிகவும் தவறானது. ஒன்பதாம் வகுப்பு என்பது மன அழுத்தம் நிறைந்த ஒரு காலகட்டம். ஏன் 9-ம் வகுப்பில் இருந்து ஒரு புதிய மொழியை அறிமுகப்படுத்துகிறீர்கள்? அதை 6-ம் வகுப்பிலேயே அறிமுகப்படுத்தலாமே?” என பதில் அளித்தார்.

மேலும் நீதிபதி நாகரத்னா, “இந்திய அரசே, தயவு செய்து 9-ம் வகுப்பில் மூன்றாவது மொழியை அறிமுகப்படுத்தாதீர்கள். சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, மாநில பாடத்திட்டங்கள் என எதுவாக இருந்தாலும் 10-ம் வகுப்பு என்பது ஒரு பொதுத் தேர்வு. இதற்கான மன அழுத்தம் 8-ம் வகுப்பின் முடிவிலிருந்தே தொடங்கி விடுகிறது” என தெரிவித்தார்.

மேலும் மாநில அரசிடம், “உங்களுக்கு என தனிப்பட்ட கல்வி முறை இருக்கலாம். ஆனால், மத்திய அரசு பள்ளிகளைத் தடுக்காதீர்கள். இது மத்திய அரசின் திட்டம், எனவே நாம் ஏன் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனப்பான்மை வேண்டாம்” என்று நீதிபதி நாகரத்னா தெரிவித்தார்.

ஜவஹர் நவோதயா வித்யாலயாக்களுக்கான இடத்தைத் தேர்வு செய்யுமாறு மாநில அரசுக்கு ஏற்கெனவே ஆறு வார கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தும், தமிழ்நாடு அரசு தற்போது கூடுதல் கால அவகாசம் கோருவதை எதிர் தரப்பு சுட்டிக்காட்டியது. இது தொடர்பாக தகுந்த அறிவுறுத்தல்களைப் பெறுவதற்கு மாநில அரசு மேலும் ஆறு வார கால அவகாசம் கோரியது.