📅 Saturday, 01 August 2026 IST | ஆடி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 01, 2026 11:30 AM

அ.ம.மு.க அக்கப்போர்.... கடுகடுப்பில் தினகரன்...

அ.ம.மு.க அக்கப்போர்.... கடுகடுப்பில் தினகரன்...

அ.ம.மு.க அக்கப்போர்.... கடுகடுப்பில் தினகரன்...

த.வெ.க. ஆட்சிக்கு வந்தாலும் வந்தது... தமிழகத்தின் பெரும்பான்மையான அரசியல் கட்சிகளில் ஏகத்துக்கும் குழப்பம். அ.தி.மு.க. பிளவு, தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் விலகல் என அரங்கேறிய அதிரடிகளுக்கு இணையாக, அ.ம.மு.க.வின் ஒரே எம்.எல்.ஏ.வான காமராஜ் அடித்த அந்தர் பல்டி தான் அதிரிபுதிரி அரசியல்!

அதிமுகவில் பயணித்துவந்த எஸ்.காமராஜ், டி.டி.வி. தினகரனின் தீவிர விசுவாசி. எனவேதான் அ.ம.மு.க.வை தினகரன் தொடங்கும்போது அவரோடு பயணிக்கத் தொடங்கினார். அதன் பலனாக அக்கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் பதவியையும் அவருக்கு கொடுத்தார் தினகரன் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு 11 இடங்கள் ஒதுக்கப்பட்டன. மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்ட காமராஜ். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் டி ஆர்.பிராஜாவை தோற்கடித்தார். அப்படிப்பட்டவர், முதலில் எடப்பாடிக்கு ஆதரவு அடுத்து தவெகவுக்கு ஆதரவு, பின்பு மறுப்பு என அடுத்தடுத்த அந்தர் பல்டிகளை அடித்து சர்க்கஸ் வேலைகளைக் காட்டினார்.

இந்நிலையில், கடந்த ஜூலை 24ம் தேதி, அமமுக பொருளாளர் தாம்பரம் கரிகாலன், "காமராஜை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகரிடம் மனு கொடுத்து அடுத்த பரபரப்பைக் கிளப்பினார். இதற்கு பதிலடியாக கட்சிக்கும் தினகரனுக்கும் என்ன சம்பந்தம்? கட்சியே என்னுடையதுதான்' என காமராஜ் ஒரே போடாக போட அமமுக வட்டாரத்தில் பதற்றத் தீ பற்றி எரிகிறது.

இதுகுறித்து, தாம்பரம் கரிகாலனிடம் பேசினோம். "காமராஜை கட்சியிலிருந்து நீக்கியது கட்சித் தலைவர் எடுத்த ஒழுங்கு நடவடிக்கை காமராஜ் எங்கள் கட்சியின் தலைவரால், வேட்பாளராக நிறுத்தப்பட்டு குக்கர் சின்னத்தில் வெற்றிபெற்றவர். எனவேதான் அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என மனு கொடுத்திருக்கிறோம்" என்றார்.

இதற்கிடையே, டி.டி.வி. தினகரனை கண்டித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட அக்கட்சியின் மாநில மாணவரணி செயலாளரும் வழக்கறிஞருமான நல்லதுரையின் பதவியையும் பறித்திருக்கிறார் தினகரன். இதுகுறித்து நல்லதுரையிடம் பேசினோம். "எம்.ஜி.ஆர். காலத்தில் அதிமுக எம்.எல்.ஏக்களாக இருந்த அழகு திருநாவுக்கரசு, எஸ்ஆர்.ராதா, ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட சிலர் வைகோவை ஆதரித்ததால் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, அப்போதைய அவைத் தலைவரிடம் தகுதி நீக்கம் செய்ய மனுவும் கொடுக்கப்பட்டது.

அவைத் தலைவரும் அவர்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட இதை எதிர்த்து ஜி.விஸ்வநாதன் உயர் நீதிமன்றத்துக்குப் போனார் அவைத் தலைவரின் உத்தரவை உறுதி செய்தது நீதிமன்றம் பிறகு உச்ச நீதிமன்றத்திற்குப் போனது வழக்கு. கடந்த 1996ல் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதியரசர்கள், அவர்கள் அக்கட்சியின் சார்பில் வெற்றிபெற்றிருக்கிறார்கள். எனவே கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்தாலும் தகுதிநீக்கம் செல்லும் என தீர்ப்பளித்திருந்தனர்.

ஆனால், உத்தரப்பிரதேச எம்.பிஆக இருந்த அமர்சிங் மற்றும் அமிதாப்பச்சனின் மனைவி ஜெயப்பிரதா ஆகியோர் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த வழக்கும் உச்ச நீதிமன்றத்திற்குப் போனது. இந்த வழக்கிலும் ஜி.விஸ்வநாதன் வழக்கின் தீர்ப்பை உதாரணம் காட்டி வாதாடியது அவர்கள் சார்ந்திருந்த கட்சி. ஆனால் இந்த வழக்கில் கடந்த 2016ம் ஆண்டு தீர்ப்பளித்த நீதியரசர்கள், 'ஜி.விஸ்வநாதன் வழக்கில் வழங்கிய தீர்ப்பு சரியானது என கூற முடியாது. எனவே இந்த வழக்கை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அனுப்புகிறோம்' எனக் கூறி இத்துடன் ஏழு கேள்விகளை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அனுப்பிவைத்தார்கள். இன்று வரை அதற்கான தீர்வு கிடைக்கவில்லை.

இதேபோன்று 2021ல் இன்னொரு வழக்கு வந்தபோதும். அந்த வழக்கையும் கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கே உச்ச நீதிமன்றம் அனுப்பி வைத்திருக்கிறது. அதற்கும் இன்று வரை தீர்வு கிடைக்கவில்லை. இவற்றை எல்லாம் அறிந்த டி.டி.வி தினகரன் ஏன் இப்படி ஒரு நடவடிக்கையில் இறங்கினார் என்பதைத்தான் நான் எழுதி இருந்தேன். அதற்காகத்தான் எனக்கு கொடுத்திருந்த பதவியை எடுத்திருக்கிறார். ஆனால் இப்போதுதான் நான் நிம்மதியாக இருக்கிறேன்" என்றார்.

இவ்வளவு சர்ச்சைகளுக்கும் காரணமான மன்னார்குடி எம்.எல்.ஏ. எஸ்.காமராஜிடம் பேசினோம். சபாநாயகரிடம் மனு கொடுத்திருக்கிறார்கள். அதுகுறித்து அவைத்தலைவர் என்னிடம் விளக்கம் கேட்கும்போது நான் விரிவாக பேசுகிறேன்" என்று மட்டும் கூறி முடித்துக்கொண்டார்.

பத்த வச்சிட்டியே பரட்டை!

- குமுதம் செய்திகளுக்காக வீ.மாணிக்கவாசகம்.