📅 Wednesday, 23 September 2026 IST | புரட்டாசி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News September 23, 2026 06:04 PM

ஆசிய போட்டி: இந்திய ஆடவர் பேட்மிண்டன் அணிக்கு கிடைத்தது வெண்கலம்.. சீனாவுடன் அரையிறுதியில் தோல்வி

ஆசிய போட்டி: இந்திய ஆடவர் பேட்மிண்டன் அணிக்கு கிடைத்தது வெண்கலம்.. சீனாவுடன் அரையிறுதியில் தோல்வி

ஆசிய போட்டி: இந்திய ஆடவர் பேட்மிண்டன் அணிக்கு கிடைத்தது வெண்கலம்.. சீனாவுடன் அரையிறுதியில் தோல்வி

நகோயா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் பேட்மிண்டன் குழு பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. ஜப்பானின் நகோயாவில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் பலம் வாய்ந்த சீனாவிடம் 1-3 என்ற கணக்கில் இந்திய அணி போராடித் தோல்வியடைந்தது. அரையிறுதி வரை முன்னேறியதைத் தொடர்ந்து இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

இதன் மூலம் ஆசிய விளையாட்டு வரலாற்றில், 40 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக இந்திய ஆடவர் பேட்மிண்டன் அணி தொடர்ச்சியாக இரண்டு பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. இதற்கு முன்பு 1982 மற்றும் 1986 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுகளில் இந்திய அணி வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தது. கடந்த 2023 ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அரையிறுதிப் போட்டியின் முதல் ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி வீரரான லக்ஷ்யா சென் , உலகத் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள சீனாவின் ஷி யு கியை எதிர்கொண்டார். இப்போட்டியில் 16-21, 18-21 என்ற நேர் செட்களில் போராடித் தோல்வியடைந்தார் லக்ஷ்யா. இதனால் சீனா 1-0 எனத் தொடக்கத்திலேயே முன்னிலை பெற்றது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆடவர் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி களமிறங்கியது. பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற உலக சாம்பியன்களான சீனாவின் லியாங் வெய் கெங் மற்றும் வாங் சாங் இணையுடன் இவர்கள் மோதினர். இதில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாத்விக் - சிராக் ஜோடி 21-11, 22-20 என்ற நேர் செட்களில் சீன இணையை வீழ்த்தி அசத்தியது. இதன் மூலம் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, சீனாவின் லி ஷி ஃபெங்கை எதிர்கொண்டார். இப்போட்டியில் 19-21, 13-21 என்ற செட் கணக்கில் ஆயுஷ் தீவிரமாகப் போராடித் தோல்வியடைந்தார். இதனால் சீனா 2-1 என்ற கணக்கில் மீண்டும் முன்னிலை பெற்றது.

வெற்றியைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான இரண்டாவது இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் ஹரிஹரன் அம்ஸகருணன் - எம்.ஆர்.அர்ஜுன் ஜோடி, சீனாவின் ஹெச் ஜி திங் மற்றும் லியு யி இணையுடன் மோதியது.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய ஜோடி கடுமையாகப் போராடி இரண்டாவது செட்டைக் கைப்பற்றியது. இருப்பினும், வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் சீன ஜோடி ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில் 16-21, 21-17, 9-21 என்ற கணக்கில் இந்திய ஜோடி தோல்வியைத் தழுவியது.

இதன் மூலம் சீனா 3-1 என்ற கணக்கில் போட்டியை வென்று இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது.அரையிறுதியில் தோல்வியடைந்த போதிலும், இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றி நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளது.