📅 Friday, 04 September 2026 IST | ஆவணி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 04, 2026 05:01 AM

ஆனந்த் VS உதயநிதி.... சட்டசபையில் அனல் பறந்த விவாதம்!

ஆனந்த் VS உதயநிதி.... சட்டசபையில் அனல் பறந்த விவாதம்!

ஆனந்த் VS உதயநிதி.... சட்டசபையில் அனல் பறந்த விவாதம்!

இன்று நடைபெற்ற சட்டபேரவை கூட்டத்தொடரில் அமைச்சர் என்.ஆனந்த் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இருவருக்குமிடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

தமிழ்நாட்டின் சட்டபேரவை கூட்டத்தொடரில் இன்று காவல்துறை மற்றும் தீயணைப்பு - மீட்புப்பணிகள் துறை மற்றும் சட்டம், நீதிமன்றங்கள் துறை மீதான விவாதம் நடைபெற்ற நிலையில்,இதில் அமைச்சர் என் ஆனந்த் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இருவருக்குமிடையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.

சட்டமன்றத்தில் இன்று துறைசார்ந்த கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலளிப்பதில்லை என எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஆனந்த், “எப்போது பேச வேண்டும், யாரிடம் பேச வேண்டும் என்பதை அவர் அறிந்தவர். நீங்கள் இரண்டு, இரண்டரை ஆண்டுகள் பேசியதால்தான் இன்று தவெக ஆட்சியில் விஜய் முதலமைச்சராக இருக்கிறார்” என்றார்.

மேலும் திமுக ஆட்சியில் தவெக தலைவர் விஜயின் பிரச்சாரங்களுக்கு முறையாக அனுமதி வழங்கப்பட்டிருந்தால், 234 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றிருக்கும் என நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் சட்டசபையில் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், முந்தைய ஆட்சிக்காலத்தில் தவெக பிரச்சாரங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும், “மாலை 4 மணிக்குக் கூட்டம் என்றால், காலை 11 அல்லது 12 மணிக்குத்தான் அனுமதி வழங்குவீர்கள். அதிலும் 37 நிபந்தனைகள் விதிப்பீர்கள். கடலூரில் இரண்டு முறை அனுமதி வழங்கிவிட்டு, பின்னர் ரத்து செய்தீர்கள்” என அவர் தெரிவித்தார். மேலும், “அனைத்து இடங்களிலும் முறையாக அனுமதி வழங்கியிருந்தால், 234 தொகுதிகளிலும் தவெக கண்டிப்பாக வெற்றி பெற்றிருக்கும். இதில் மாற்றுக் கருத்து இல்லை” என்றும் அமைச்சர் ஆனந்த் கூறினார்.

இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “நாங்கள் தவெகவைப் பற்றி பேசியதால்தான் அவர்கள் இந்த நிலைக்கு வந்ததாக கூறுகிறார்கள். ஆனால், நாங்களோ எங்கள் கட்சித் தலைவர்களோ அவர்களைப் பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அதற்கான ஆதாரம் இருந்தால் காட்டுங்கள்” என்றார்.

மேலும், சட்டப்பூர்வமாக அனுமதி வழங்கக்கூடிய இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாகவும், தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு அதனை தேர்தல் ஆணையம்தான் கையாளும் என்றும் அவர் தெரிவித்தார்.

கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்தபோதும், அங்கு ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை என சுட்டிக்காட்டிய உதயநிதி ஸ்டாலின், “தவெகவுக்கு இன்னும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எங்களுடைய ஆதரவில்தான் அவர்களது ஆட்சி நடைபெற்று வருகிறது” என்றும் தெரிவித்தார்.