📅 Thursday, 30 July 2026 IST | ஆடி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 30, 2026 04:33 AM

“ஆந்திராவில் பாமகவை விரைவில் தொடங்க நடவடிக்கை”

“ஆந்திராவில் பாமகவை விரைவில் தொடங்க நடவடிக்கை”

சென்னை: “ஆந்திர மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப, அங்கு விரைவில் பாமக தொடங்கப்படவுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார்.

பாமகவின் பொதுக்குழுக் கூட்டம், அக்கட்சியின் தலைவர் அன்புமணி தலைமையில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் அன்புமணி பேசியது: “எல்லோரும் ஒன்றாக இணைந்துள்ள நிலையில் ‘நாம்’ என்ற அந்த வார்த்தையை கேட்கும்போது, மகிழ்ச்சியாக இருக்கிறது. ராமதாஸ் இந்த பொதுக்குழுவில் இல்லை என்ற ஒரு வருத்தம் இருக்கிறது. அவர் இங்கே இல்லை என்றாலும், அவரது மனம் இங்கேதான் இருக்கும். அவரின் வாழ்த்துகளும் நமக்கு இருக்கிறது.

தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கு எத்தனையோ சாதனைகளை பாமக செய்துள்ளது. அதற்கெல்லாம் காரணம் ராமதாஸ். அவர் வாழும் காலத்தில் பாமக தமிழகத்தை ஆட்சி செய்ய வேண்டும். இது நிச்சயம் நடக்கும்.

கர்நாடகாவில் ஆட்சியில் உள்ள காங்கிரஸும், ஆட்சிக்கு வரத் துடிக்கும் பாஜகவும் சேர்ந்து தமிழகத்துக்கு தண்ணீர் வரவிடாமல் சதித் திட்டம் தீட்டி வருகிறார்கள் என்று கூறியதற்கு. தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் ஆவேசமாக பேசுகிறார். நாங்கள் துப்பாக்கி சூடு, தடியடி, சிறை என அனைத்தையும் பார்த்து விட்டோம். தற்போது அமைதியாக, ஆக்கபூர்வமான அரசியல் செய்து வருகிறோம்.

காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசியல்வாதிகளிடம் இருக்கும் ஒற்றுமை, தமிழக அரசியல்வாதிகளிடம் இல்லை. அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக முதல்வர் கூட்ட வேண்டும். இது தவெக பிரச்சினையல்ல; தமிழகத்தின் பிரச்சினை.

ஆந்திர மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப, அங்கு விரைவில் பாமக தொடங்கப்படவுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவர வலியுறுத்தி சட்டப்பேரவை உறுப்பினர் சவுமியா அன்புமணி தலைமையில் மது ஒழிப்பு இயக்கம் அக்.2-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. மக்களை கிராமம்தோறும் சென்று சந்தித்து மது ஒழிப்பு தொடர்பாக பிரச்சாரம் 2 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளப்படும்” என்று அவர் பேசினார்.