ஆட்சி மாறியதால் காட்சிகள் மாறும் என நினைத்த மக்கள் தலையில் இடி: பழனிசாமி ஆவேசம்
சென்னை: 'சட்டம் -ஒழுங்கு சீர்கேடால், தமிழகத்தில் ரத்த ஆறு ஓடுகிறது' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: முதல்வர் விஜய் நடித்த படங்களில் வருவது போல், தமிழகத்தின் வீதிகள் தோறும் கொலை வெறி காட்சிகள், வன்முறை வெறியாட்டங்கள் நடக்கின்றன. சாலைகளில் மழை, வெள்ளம் ஒடுகிறதோ, இல்லையோ; ரத்த ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. 'சிங்கப்பெண் படை' என்பது வெறும் 'ரீல்ஸ்' என்பதை, பாலியல் குற்றங்கள் அம்பலப்படுத்துகின்றன.
'அண்ணனாக பாதுகாப்பு கொடுப்பேன்' என்று 'டயலாக்' பேசுவது மட்டும் போதாது. நல்லாட்சியை தர, தெம்பும், திராணியும், வேலை வாங்கும் திறமையும் தேவை. கடந்த ஐந்து மாதங்களாக, சட்டம்- - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. 'ஆட்சி மாறியதால், காட்சிகள் மாறும்' என, நினைத்த தமிழக மக்கள் தலையில், இடியை இறக்கி உள்ளனர்.
பிரச்னையின் தீவிரத்தை, அரசு தட்டிக் கழிக்கிறது. எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்கும் ஒரே எண்ணத்தோடு, பழிபோடும் வேலையை, அமைச்சர்கள் செய்கின்றனர். ஆளும் கட்சியினரின் குடுமிப்பிடி சண்டையை விலக்கி விடுவதிலேயே, போலீசார் பொழுதை கழிக்கின்றனர்.
மக்களை எப்படி ஏமாற்றலாம்; த.வெ.க., மைனாரிட்டி ஆட்சியை எப்படி காப்பாற்றலாம் என்பதில் தான், முதல்வரின் கவனம் இருக்கிறது. சீரழிந்து வரும், சட்டம் --ஒழுங்கை காப்பாற்ற, இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.