📅 Monday, 14 September 2026 IST | ஆவணி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 13, 2026 06:30 AM

ஆட்சியாளர்கள் தவறு செய்தால் அஞ்சாமல் இடித்து கூறுகிறது தினமலர்: தமிழ்ப் பேராயம் தலைவர் புகழாரம்

ஆட்சியாளர்கள் தவறு செய்தால் அஞ்சாமல் இடித்து கூறுகிறது தினமலர்: தமிழ்ப் பேராயம் தலைவர் புகழாரம்

''ஆ ட்சியாளர்கள் தவறு செய்தால், அஞ்சாமல் இடித்து கூறுகிறது தினமலர் நாளிதழ்,'' என, 'தமிழ்ப் பேராயம்' அமைப்பின் தலைவர் கரு.நாகராஜன் புகழாரம் சூட்டினார்.

அவர் பேசியதாவது:

தேசியமும் தெய்வீகமும் தன் இரு கண்களாக மதித்து போற்றியவர் பாரதியார். அதே உணர்வை, 'தினமலர்' நாளிதழ் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. ​'ஊருக்கு நல்லது சொல்வேன்; எனக்கு உண்மை தெரிந்ததை சொல்வேன்' என, பாரதி தெரிவித்தார்.

அதேபோல், 'தினமலர்' நாளிதழும், ஊருக்கு நல்லதை மட்டுமே சொல்லக்கூடிய, உண்மை என்று தெரிந்ததை மட்டுமே எழுதுகிறது. எத்தனையோ இதழ்கள் உள்ளன. ஆட்சிக்கு வரும் கட்சிகளை எல்லாம், அனுசரித்துப் போகக்கூடிய இதழ்கள் பல உண்டு.

ஆனால், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அவர்கள் நல்லது செய்தால், அதை மனம் திறந்து பாராட்டுவதும், அல்லனவற்றைச் செய்தால், அஞ்சாமல் இடித்துக் கூறுவதும், தங்களுடைய கொள்கையாக கொண்டிருக்கிற ஒரே நாளிதழ், 'தினமலர்'தான்.

'தினமலர்' பலரின் துாக்கத்தைக் கெடுத்திருக்கிறது; பலருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

'தினமலர்' நாளிதழ் நிறுவனர், டி.வி.ராமசுப்பையரின் வரலாற்றை படித்து, நான் வியந்து போனேன். காந்தியின் லட்சியங்களை, தன்னுடைய வாழ்க்கையில் பின்பற்றியுள்ளார். பட்டியலின சமூக மக்களை அரவணைத்து, அவர்கள் வாழ்க்கை மேம்பட,பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

'நாளிதழ்' தொடங்கும்போதே, 'இந்த நாளிதழ், எந்த அரசியல் கட்சியையும் சாரா பத்திரிகையாக இருக்கும்' என, தெரிவித்திருந்தார்.

கடந்த 1978ல் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., எழுத்து சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தினார். ஆனால், அதற்கு முன்பே, எழுத்து சீர்திருத்தத்தை, 'தினமலர்' நடைமுறைப்படுத்தியது.

'சாகித்ய அகாடமி' என்ற அமைப்பு, இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு எப்படி செயல்படுகிறதோ, அதேபோல், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக, ஒரு அமைப்பு வேண்டும் என்ற நோக்கத்துடன்,எஸ்.ஆர்.எம்., பல் கலை வேந்தர் பாரிவேந்தர் , தமிழ்ப் பேராயம் அமைப்பை தொடங்கினார்.

'தினமலர்' நாளிதழின் தமிழ்ப் பணியை அங்கீகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அதன் பவள விழாவை நாங்கள் நடத்துகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்