📅 Friday, 25 September 2026 IST | புரட்டாசி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 25, 2026 05:01 PM

ஆட்டமும், சத்தமும் மட்டும் போதுமா?.. அமைதியும், அனுபவமும் வேண்டாமா?.. ஃபீல் குட் படங்களின் அவசியம்

ஆட்டமும், சத்தமும் மட்டும் போதுமா?.. அமைதியும், அனுபவமும் வேண்டாமா?.. ஃபீல் குட் படங்களின் அவசியம்

சென்னை: கோலிவுட்டிலிருந்து இப்போது எக்கச்சக்கமான படங்கள் வருகின்றனதான். அவற்றில் சில பான் இந்தயா படங்களாக வருகின்றன. அப்படி வந்து எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. பெரிய பெரிய தலைகளுக்கே அதுதான் நிலைமை. பல படங்கள் கமர்ஷியலாகவும், ஓவர் வயலன்ஸாகவும் வந்தாலும் ஃபீல் குட் படங்களின் வருகை சமீபமாக அதிகரித்திருப்பது ஆரோக்கியமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

தென்னிந்திய சினிமாவின் தலைநகரமாக ஒரு காலத்தில் விளங்கியது கோலிவுட். அண்டை மாநிலங்களிலிருந்து பலர் இங்கே வந்து உருவாகியிருக்கிறார்கள்; ஏகப்பட்ட நல்ல கதைகள் இங்கே கருவாகி அற்புதமான நினைவுகளாகவும், அழியாத அனுபவங்களாகவும் பிரசவமாகியிருக்கின்றன. கோலிவுட்டின் பொற்காலம் 80களில் தொடங்கியது எனலாம். பாரதிராஜா, பாலசந்தர், மகேந்திரன், பாலு மகேந்திரா, பாக்யராஜ், எஸ்.பி.முத்துராமன், சுந்தரராஜன், வசந்த்என க்ளாஸிக் பந்தயங்கள் அடிக்க ஆட்டக்காரர்கள் இங்கே இருந்தார்கள்.

ரசிகர்களின் ரசனை: முக்கியமாக அவர்கள் எடுக்கும் படங்களை ரசிக்கும் மனநிலையில் மக்களிடம் நிதானமும், ரசனையும் இருந்தது. அதனால்தான் பாலுமகேந்திராவால் ஒரூ வீடு படத்தையும், மகேந்திரனால் உதிரிப்பூக்களையும் கொடுக்க முடிந்தது. அப்போது மக்களின் வாழ்வியல் இலக்கியத்தோடு மட்டுமில்லாமல் நிகழ்கால மனிதர்களுடன் பின்னி பிணைந்திருந்தது. அதனை திரையில் பார்க்கும்போதும் அதோடு எளிதாக மக்கள் கனெக்ட் ஆகிக்கொண்டார்கள்.

சினிமாவின் மாறுமுகம்: 90களுக்குள் சினிமா அடியெடுத்து வைத்தபோது ஃபீல் குட் படங்களோடு சேர்த்து சின்ன சின்ன கமர்ஷியல் விஷயங்களையும் சேர்த்து ஒருகட்டத்தில் அது உணர்வுகளை எல்லாம் விழுங்கி செரித்து சினிமாவை ஆக்கிரமித்தது. இப்போது அதன் உச்சக்கட்டமாக வெறும் கமர்ஷியல் விஷயங்கள் மட்டுமே சினிமாவுக்கு போதும் என்று படைப்பாளர்களே முடிவு செய்துவிட்டார்கள் போல.

ஹீரோக்களின் ஆசை: இப்போதெல்லாம் இலையிலிருந்து விழும் மழைத்துளியை ரசிக்க ஆள் இருந்தாலும், அதை காட்சிப்படுத்த ஆட்கள் இல்லை என்றே தோன்றுகிறது. அவ்வப்போது 96 பிரேம், மேற்கு தொடர்ச்சி மலை லெனின் பாரதி போன்றோர் வெளியே தெரிகிறார்கள். இந்த மாற்றத்துக்கு ஹீரோக்களும்கூட முக்கிய காரணம்தான். தான் பத்து பேரை அடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவாரே ஒழிய; பத்து பேர் மத்தியில் தான் அமைதியாக அனைத்தையும் ரசிக்கும் சாமானியனாக அமர ஆசைப்படமாட்டார்.

ரசிகர்களுக்கும் பலன்: ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்டோர் எல்லாம் சமீபத்தில் ஃபீல் குட் என்பதையே மறந்துவிட்டார்கள் என்றேதான் தோன்றுகிறது. இவர்களில் சூர்யா மட்டும் இப்போது அந்த ஏரியாவுக்கு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் மூலம் திரும்பியிருக்கிறார். அந்தப் பாதையில் அவர் அப்படியே தொடர்வார் என்றால் ஃபீல் குட் படங்களின் வருகை அதிகரிக்கும். அப்படி அதிகரித்தால் பலன் சினிமாவுக்கு மட்டுமில்லை ரசிகர்களுக்கும்தான்.

அது கலை இல்லை: ஏனெனில் தமிழ் சமூகத்தில் சினிமாவின் தாக்கத்தை சொல்லி தெரிய வேண்டாம். அதன் மீது அளவற்ற பற்று வைத்திருப்பதால்தான் மாநிலத்தை ஆட்சி செய்யும் உரிமையையே மக்கள் தூக்கி கொடுத்திருக்கிறார்கள். அப்படி இருக்கையில் ஒரு சினிமாவுக்கு ஆழமான பொறுப்பு உண்டு. குறிப்பாக, வெறும் துப்பாக்கி சத்தத்தையும், ரத்தத்தையும், வைபான நடனத்தையும் மட்டும் காட்டி ரசிகர்களை ஒருவித போதை நிலையிலேயே வைத்திருப்பது கலைக்கு அழகு அல்ல. அது கலையே அல்ல.

ரிதம் உதாரணம்: மாறாக, ஒரு படத்தால் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியாவிட்டாலும் ஒரு மனிதனின் மனதில் அமைதியை தூவலாம். அவர் பார்வையை நிதானப்படுத்தலாம். அப்படி பல படங்கள் இங்கே வேலை செய்திருக்கின்றன. ரிதம் பார்த்துவிட்டு பக்குவப்பட்ட மனிதர்கள் ஏராளம் பேர் உண்டு. அந்த கார்த்திக் மாதிரி சொல்லிலும், செயலிலும் நிதானித்து இருக்க வேண்டும் என்ற தெளிவை பெற்றவர்கள் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறார்கள். சமீபத்திய மொத ராத்திரி படத்தில்கூட பேசாத விஷயங்கள் இல்லை. அதேபோல் மெய்யழகன் எவ்வளவு முக்கியமான படம் என்று அனைவருக்குமே தெரியும். பக்கத்து மாநிலத்து நானியெல்லாம் அந்தப் படத்தை அவ்வளவு கொண்டாடுகிறார்.

இயக்குநரின் பார்வை: இப்படிப்பட்ட படங்கள் சமீபத்தில் வருவது நல்ல அறிகுறிதான். சூர்யா போன்ற பெரிய ஹீரோக்களின் பார்வை ஃபீல் குட் படங்கள் பக்கம் திரும்பினால் சினிமாவும் இளைப்பாறும், ரசிகர்களும் நிம்மதியடைவார்கள். ஃபீல் குட் படங்களின் நிலைமை குறித்து எண்ணித்துணிக திரைப்படத்தின் இயக்குநர் வெற்றிச்செல்வனிடம் பேசினோம். அவர் பேசுகையில், "ஃபீல் குட் படங்களின் வருகைதான் அதிகரிக்க வேண்டும். நிறைய படங்கள் பார்ப்பது மனிதர்களின் வழக்கமாகிவிட்டது. இப்போது தினமும் ஒரு படத்தை பற்றி பேசுகிறோம்.

மனிதர்களின் வாழ்க்கையில் சினிமா பின்னி பிணைந்துவிட்டது. அப்படியிருக்கையில் தொடர்ந்து கமர்ஷியல், ஆக்‌ஷன்களை அதிகமாக பார்க்கையில் மனிதர்களின் மனநிலையே மாறுகிறது. மனிதரின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு சினிமா முக்கியமான ஆயுதம். கேரளா அரசியல் ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் இவ்வளவு மேம்பட்டிருக்க காரணம் அங்கே நல்ல நல்ல ஃபீல் குட் படங்கள் வருவது முக்கியமான காரணம்" என்ற முக்கியமான பார்வையை முன்வைத்தார்.

தொடர்ந்து அவரிடம் ஜென் ஸி தலைமுறையினரும் பார்க்க வேண்டிய 5 ஃபீல் குட் படங்கள் கேட்டதற்கு, '16 வயதினிலே, உதிரிப்பூக்கள், அவள் ஒரு தொடர்கதை, கேளடி கண்மணி, சேது' சொல்வேன். கமர்ஷியல், ஜாலிதான் சினிமா என்று நினைத்திருக்கிறோம். நாம் எந்த கலாசாரத்திலிருந்து வந்திருக்கிறோம் என்பது இருக்கிறது. இப்போது நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் சினிமா இப்படியான சினிமாக்களிலிருந்துதான் மாறி வந்திருக்கிறது என்பதை இப்போதைய தலைமுறையினர் புரிந்துகொள்வதற்கு இந்தப் படங்களை பார்க்க வேண்டும்" என்றார்.

சினிமா நம்மை இரண்டு மணி நேரம் கத்த வைப்பதற்காக மட்டும் இருக்க வேண்டியதில்லை. சில நேரங்களில் இரண்டு மணி நேரம் நம்மை அமைதியாக உட்கார வைப்பதும் சினிமாதான். ஆட்டமும், சத்தமும் நமக்கு அவசியம்தான். ஆனால் வாழ்க்கையே சத்தமாக மாறிவிட்ட காலத்தில், திரையில் கொஞ்சம் அமைதியும் வேண்டும்.