📅 Friday, 18 September 2026 IST | புரட்டாசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 17, 2026 12:33 AM

ஆவின் பால் தட்டுப்பாடு தவெக அரசுக்கு அவப்பெயரையே பரிசாக அளிக்கும்

ஆவின் பால் தட்டுப்பாடு தவெக அரசுக்கு அவப்பெயரையே பரிசாக அளிக்கும்

ஆவின் பால் தட்டுப்பாடு தவெக அரசுக்கு அவப்பெயரையே பரிசாக அளிக்கும் - தமிழ்நாடு பால் முகவர்கள் நலச் சங்கம்

ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வினால், தனியார் பால் விற்பனை விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தமிநாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.

Published : September 16, 2026 at 3:06 PM IST

Updated : September 16, 2026 at 4:13 PM IST

சென்னை: ஆவின் பால் தட்டுப்பாடு தவெக அரசிற்கு அவப்பெயரையே பரிசாக கொடுக்கும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் பொன்னுச்சாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு ஆவினுக்கான பால் கொள்முதல் விலையை கடந்த வாரம் உயர்த்திய நிலையில், அதற்கேற்ற வகையில் விற்பனை விலையை உயர்த்தாமல் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் திமுக செய்த அதே தவறை தற்போதைய தவெக. அரசும் செய்திருப்பதால் ஆவினுக்கான நிதியிழப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இதற்கு காரணம், பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டும் ஆவினுக்கான பால் வரத்து அதிகரிக்காததால் அண்டை மாநில கூட்டுறவு பால் நிறுவனமான நந்தினியிடமிருந்து கூடுதல் விலை கொடுத்து பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

மேலும், வடமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் வெண்ணெய், பால் பவுடர் கொண்டு பால் உற்பத்தி செய்யும் நிலை தொடர்வதால், ஆவின் நிறுவனத்திற்கு ஏற்படும் கடுமையான நிதியிழப்பை கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் விற்பனையை குறைக்க, நிர்வாக இயக்குநரும், மாவட்ட ஒன்றியங்களில் பொது மேலாளர்களும் வாய்மொழி உத்தரவுகளை பிறப்பித்து, ஆவின் பாலுக்கு செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி, தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயரை உருவாக்கி வருகின்றனர்.

அதிலும், குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆவின் நிறை கொழுப்பு பால் உற்பத்தி மற்றும் விற்பனை கடந்த சில வாரங்களுக்கு முன் முற்றிலுமாக நிறுத்தப்பட்டதோடு, ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி, தஞ்சை, கோவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே ஆவின் பால் விநியோகம் பலமடங்கு திட்டமிட்டு குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை பெருநகரில் தினசரி ஆவின் பால் விற்பனை சுமார் 16.5 லட்சம் லிட்டருக்கு மேல் இருந்த நிலையில் பால் முகவர்களுக்கான ஆவின் பால் விநியோகத்தை கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 25 சதவீதத்திற்கும் மேல் குறைக்கப்பட்ட நிலையில், இன்று (செப்டம்பர் 15) 10 சதவீதம் வரை ஆவின் பால் விநியோகத்தை குறைக்க ஆவின் நிர்வாகத்தால் மீண்டும் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சென்னை பெருநகர் முழுவதும் அந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் சென்னை பெருநகரில் பொதுமக்களுக்கு தேவையான ஆவின் பால் விநியோகத்தை செய்ய முடியாமல் பால் முகவர்கள் கடும் இன்னலுக்கு உள்ளாக்கியுள்ளனர். ஆவின் நிர்வாகத்தின் இந்த செயல்பாடுகள் என்பது ‘உடலுக்கேற்ற வகையில் ஆடைகளை வடிவமைத்து வெட்டி, தைக்காமல், ஆடைகளுக்கேற்ற வகையில் உடலை வெட்டி, காயப்படுத்துவதைப் போல் உள்ளது.’

மேலும், சுமார் 4 ஆண்டுகள் கழித்து ஆவினுக்கான பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் பல்லாயிரம் கோடி ருபாய் ஆவின் நிறுவனம் நிதி இழப்பில் சென்றாலும், அந்த இழப்பு ஆவினை முடக்கி விடாது. காரணம் மாநில அரசின் நிதி பங்களிப்போடு செயல்படும் கூட்டுறவு நிறுவனம் என்பதால் அந்த இழப்பு பொதுமக்கள் தலையில் வேறு வகையில் வரியாக திணிக்கப்படும்.

ஏற்கனவே ஆவின் மற்றும் தனியார் பால் இரண்டிற்குமான விற்பனை விலை என்பது மலைக்கும், மடுவிற்குமானதாக இருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக குறைந்தபட்சம் லிட்டருக்கு 19 ரூபாய் முதல் 24 ரூபாய் வரை விற்பனை வித்தியாசம் இருக்கிறது. இந்நிலையில், தனியார் நிறுவனங்களின் பால் விற்பனை விலை மேலும் உயர்த்தப்படும்பட்சத்தில், பொதுமக்கள் விற்பனை விலை குறைவாக உள்ள ஆவினை நோக்கி திரும்பும் நிலை ஏற்படும். ஆனால் ஏற்கனவே ஆவினில் கடுமையான பால் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், ஆவின் பாலுக்கு கூடுதல் தட்டுப்பாடு ஏற்பட்டு, அதனால், தவெக அரசுக்கு அவப்பெயரே பரிசாக கிடைக்கும்.

எனவே, தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் காப்பற்றப்பட வேண்டும். எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் ஆவின் பால் விற்பனை விலையை மற்ற மாநில கூட்டுறவு பால் நிறுவனங்களைப் போல விற்பனை விலையில் சீர்திருத்தம் செய்து தட்டுப்பாடற்ற பால் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், அமுல், நந்தினி போன்று அரசியல் தலையீடற்ற, சுயசார்போடு இயங்குகின்ற வகையில் ஆவின் நிறுவனத்தை தன்னாட்சி பெற்ற நிறுவனமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.