📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 17, 2026 04:03 AM

ஆயுதபூஜை தொடர் விடுமுறை

ஆயுதபூஜை தொடர் விடுமுறை

ஆயுதபூஜை தொடர் விடுமுறை - கொட்டும் மழையிலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் குற்றச்சம்பவங்களை தடுக்கும் பொருட்டு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தாம்பரம் காவல் துணை ஆணையர் கார்த்திகேயன் நேரில் ஆய்வுச் செய்தார்.

Published : October 16, 2026 at 11:03 PM IST

சென்னை: ஆயுதபூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. கனமழை காரணமாக பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

தொடர் விடுமுறை- அலைமோதிய கூட்டம்

நாளை சனிக்கிழமை (அக்.17), நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (அக்.18), அக்.19- ஆம் தேதி திங்கட்கிழமை ஆயுதபூஜை, அக்.20- ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சரஸ்வதி பூஜை என நான்கு நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் பொதுமக்கள், தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். சேலம், கோயம்புத்தூர், சென்னை போன்ற பேருந்து நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

குறிப்பாக, சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இன்று (அக்.16) மாலை முதல் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இரவில் கூட்டம் அலைமோதியது. இது ஒருபுறம் இருக்க திடீரென பெய்த கனமழையால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு வெளியே மழைநீர் தேங்கியதால் சாலையைக் கடந்து பேருந்து நிலையத்துக்கு செல்ல முடியாமல் பயணிகள் திணறினர்.

அதேபோல், பொதுமக்கள் தங்களது வாகனங்களிலும் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கத் தொடங்கியதால் சென்னையில் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்துக்கு நேரில் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து ஊர்ந்துச் சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ஆயுதபூஜையை முன்னிட்டு, சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 8,764 பேருந்துகளுடன் கூடுதலாக 6,199 சிறப்புப் பேருந்துகள் என நான்கு நாட்களில் மொத்தம் 14,963 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்குவதற்குப் போக்குவரத்துத்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, சேலம், கோயம்புத்தூர், கடலூர், சிதம்பரம், புதுச்சேரி போன்ற ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல், மாதவரம், கோயம்பேடு போன்ற பேருந்து நிலையங்களில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு பயணிகளின் வசதிக்காகப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் குற்றச்சம்பவங்கள் தடுக்கும் பொருட்டு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தாம்பரம் காவல் துணை ஆணையர் கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வுச் செய்தார். அத்துடன், பேருந்து நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.