ஐபிஎல் பவர்பிளே விதியை மாற்ற வேண்டும்.. சச்சின் டெண்டுல்கர் யோசனை
ஐபிஎல் பவர்பிளே விதியை மாற்ற வேண்டும்.. சச்சின் டெண்டுல்கர் யோசனை
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், டி20 கிரிக்கெட்டில் ஒரு முக்கிய வியூக மாற்றத்தை முன்மொழிந்துள்ளார். பவர்பிளே விதியை இரண்டாக பிரிப்பதன் மூலம் புதிய பரிமாணத்தைச் சேர்க்கும் என்றார். ராஜஸ்தான் ராயல்ஸ் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் ராஜத் படிதார் தலைமையிலான ஆர்சிபியின் ஐபிஎல் 2026 கோப்பை வெற்றியைப் பாராட்டினார்.
சமீபத்திய சீசன் குறித்து பேசிய சச்சின், முக்கியமான போக்குகளைப் பகிர்ந்து கொண்டார். “இந்த சீசனில் நான் கவனித்த ஒரு போக்கு என்னவென்றால், பல ஆட்டங்கள் 7 முதல் 15 ஓவர்களுக்கு இடையில் தீர்மானிக்கப்பட்டன. அணிகள் இப்போது பவர்பிளே மற்றும் கடைசி ஓவர்களுக்கு முன்பை விட சிறப்பாகத் தயாராகிவிட்டன,” எனப் பதிவிட்டார்.
நவீன டி20 கிரிக்கெட்டில், இன்னிங்ஸின் நடுப்பகுதி தீர்க்கமான களமாக மாறியுள்ளது என்றார் டெண்டுல்கர். ஆட்டத்தை இன்னும் வியூகம் சார்ந்ததாக்க அவர் புதிய விதி மாற்றத்தைப் பரிந்துரைத்தார்.“பவர்பிளேயை இரண்டு பகுதிகளாகப் பிரிக்க வேண்டும் என்று நான் உணர்கிறேன்: முதல் 4 ஓவர்கள் பேட்டிங் பவர்பிளே ஆகவும், இரண்டு ஓவர்கள் பந்துவீச்சு பவர்பிளே ஆகவும், இவை இன்னிங்ஸின் எந்த நேரத்திலும் பயன்படுத்தப்படலாம்.
இதை நடைமுறைப்படுத்தினால், இது டி20 கிரிக்கெட்டின் மிகவும் வியூகம் சார்ந்த கட்டமாக மாறும்,” என்று அவர் விளக்கினார். ராஜஸ்தான் ராயல்ஸின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் தாக்குதல் ஆட்டத்தால் ஈர்க்கப்பட்டார். அவரது அதிரடி ஆட்டம் ரசிகர்களையும் எதிரணிகளையும் கவர்ந்தது. “வைபவ் சூர்யவன்ஷியின் செல்வாக்கு, அவர் அடித்த ரன்களைத் தாண்டியது. எதிரணிகள் அவரைப் பற்றி யோசித்தனர், அவருக்காகத் திட்டமிட்டனர், அவர் களத்திற்கு வருவதற்கு நீண்ட கால காத்திருந்தனர்,” என்றார் டெண்டுல்கர்.
“எலிமினேட்டர் மற்றும் குவாலிஃபையர் ஆட்டங்களில் அவரது விரைவான ஸ்கோரிங் திறன், அதிக நெருக்கடியிலும் அவரது நோக்கம் மாறவில்லை என்பதை நிரூபித்தது. மிக முக்கியமாக, அவர் களத்திற்கு வந்த ஒவ்வொரு முறையும் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு ஒரு கூடுதல் நம்பிக்கையையும் அவரது பேட்டிங் கொடுத்தது,” என சச்சின் பாராட்டினார்.
“ஒவ்வொரு வெற்றிகரமான அணியும் ஒரு அடையாளத்தை வளர்த்துக் கொள்கிறது. ஆர்சிபியின் அடையாளம் பொறுப்பை ஒவ்வொரு வீரர்களும் ஏற்று கொண்டு கட்டமைக்கப்பட்டதாகத் தோன்றியது. ராஜத் படிதார் முன்னணியில் இருந்து முழுமையாக வழிநடத்தினார், ஆனால் மிக முக்கியமாக, மற்றவர்களும் அவ்வாறே செய்யக்கூடிய ஒரு சூழலை உருவாக்க அவர் உதவினார். அவருடைய கேப்டன்ஷி அவர்கள் மீண்டும் ஒரு இறுதிப் போட்டி வரை சென்றதில் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது,” என்று சச்சின் குறிப்பிட்டார்.