📅 Monday, 14 September 2026 IST | ஆவணி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News July 23, 2026 09:00 PM

அமைதிக்கு முன்னுரிமை தரும் தென்கொரியா

அமைதிக்கு முன்னுரிமை தரும் தென்கொரியா

சோல்: வடகொரியா தொடர்பான அணுகுமுறையில் ‘அணுவாயுதக் களைவுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கையைக் கைவிட்டு, ‘அமைதிக்கு முன்னுரிமை’ அளிக்கும் புதிய கொள்கைக்குத் தென்கொரியா மாறுகிறது.

தென்கொரியாவின் ஒருங்கிணைத்தல் அமைச்சர் சுங் டோங் யங் வியாழக்கிழமையன்று (ஜூலை 23) இதனைத் தெரிவித்தார். அணுவாயுதமற்ற கொரியத் தீபகற்பத்தை உருவாக்குவதே இறுதி இலக்கு என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.

வடகொரியாவின் அணுவாயுத நடவடிக்கைகளை உடனடியாக முடக்குவதற்கே தென்கொரிய அரசாங்கம் முன்னுரிமை அளிக்கிறது. அணுவாயுதக் களைவைத் தொடக்கத்திலேயே நிபந்தனையாக விதிப்பது பேச்சுவார்த்தையை முடக்கிவிடும் என்று அமைச்சர் சுங் சுட்டிக்காட்டினார். இதன் காரணமாகவே ஏழு ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையிலான அதிகாரபூர்வப் பேச்சுவார்த்தை தடைபட்டுள்ளது.

வடகொரியா தனது நிலத்தடி யுரேனிய செறிவூட்டும் ஆலைகளையும் புளுட்டோனியம் அணு உலையையும் தொடர்ந்து இயக்கி வருகிறது. இதனால் அதன் அணுவாயுதத் தயாரிப்புத் திறன் அதிகரித்து வருகிறது. மேலும் தாமதிப்பது வடகொரியா தனது அணுவாயுதக் குவியலைப் பெருக்கவே வழிவகுக்கும் என்று அமைச்சர் சுங் எச்சரித்தார்.

தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங், பதற்றத்தைத் தணிக்கப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டபோதிலும் வடகொரியா பகைமைப் போக்கையே தொடர்கிறது. அமெரிக்காவுடன் தென்கொரியா நெருங்கிய உறவு வைத்திருப்பதாகக் கூறி பேச்சுவார்த்தையை வடகொரியா நிராகரித்து வருகிறது.

இருப்பினும், பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதில் அமெரிக்கா மற்றும் வடகொரியா ஆகிய இருதரப்புக்கும் உத்திபூர்வத் தேவை உள்ளது. ‘அமைதியான இரு நாடுகள்’ என்ற இடைக்கால உறவுமுறை மூலம் இறுதியாக இரு கொரியாக்களையும் இணைக்க முடியும் என்று தென்கொரியா நம்புகிறது. வடகொரியாவை அதனுடைய அதிகாரபூர்வப் பெயரான ‘சோசோன்’ என்று அழைக்கும் யோசனையையும் அவர் முன்வைத்துள்ளார்.