அமெரிக்கா
அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையில் பின்னடைவு; டிரம்ப் புதிய வியூகம்
அமெரிக்க இடைக்காலத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஈரானுடனான போரில் அமெரிக்கா வெற்றி பெற்றுவிட்டதாக மக்களுக்கு அறிவிக்கும் வகையில், அணுசக்தி ஒப்பந்தம் ஏதுமின்றி பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறும் யோசனையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ், ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "நாங்கள் ஈரானுடனான இந்த மோதலின் நடுப்பகுதியில் இருக்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் மீது அமெரிக்கா தொடர்ந்து தூதரக மற்றும் பொருளாதார அழுத்தங்களை கொடுக்கும் என்றும், அமெரிக்க மக்கள் குறைந்த விலையில் எரிபொருளைப் பெறுவதை அரசு உறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு முன்நிபந்தனையாக, அமெரிக்கா பல பில்லியன் டாலர்களை இழப்பீடாக வழங்க வேண்டும், படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் மற்றும் கடற்படை முற்றுகையை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென ஈரான் வலியுறுத்தியுள்ளது.
ஈரானின் இந்தத் நிபந்தனைகளால், அப்பகுதியில் கப்பல் போக்குவரத்தை சீரமைக்க முயன்று வரும் டிரம்பின் முயற்சிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மறுபுறம், அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல் தொடங்க உள்ள சூழலில், போரினால் உயர்ந்துள்ள எரிபொருள் விலையை குறைத்து, அமெரிக்காவின் வெற்றியாக சித்தரிக்க டிரம்ப் தீவிரமாக முயன்று வருகிறார்.
"டிரம்ப் ஈரான் போரில் வெற்றி பெற்றுவிட்டார்" என்ற செய்தியை டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளபோதிலும், ஹார்முஸ் நீரிணையில் நிலவும் பதற்றம் கச்சா எண்ணெய் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
உலகப் போருக்குப் பிந்தைய மிகப்பரிய ராணுவத் தாக்குதலை ஈரான் மீது நடத்தத் டிரம்ப் திட்டமிட்டிருந்த போதிலும், நட்பு நாடுகளின் அறிவுறுத்தலால் அது தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஒப்பந்தம் எட்டப்படாவிட்டாலும், அமெரிக்காவின் அனைத்து இராஜதந்திர மற்றும் ராணுவ வழிகளையும் பயன்படுத்தி நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்படும் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.