📅 Friday, 14 August 2026 IST | ஆடி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 14, 2026 10:03 AM

அமித் ஷாவின் கருத்து உண்மையானால் அரசியலில் இருந்து விலகுவாரா ஆதவ்? தமிழக பா.ஜ., சவால்

அமித் ஷாவின் கருத்து உண்மையானால் அரசியலில் இருந்து விலகுவாரா ஆதவ்? தமிழக பா.ஜ., சவால்

சென்னை: 'தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறும்போது, அமித் ஷா மற்றும் பா.ஜ.,வின் கருத்து உண்மை என தெரிந்தால், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அரசியலை விட்டு விலகுவாரா' என, தமிழக பா.ஜ., சவால் விடுத்துள்ளது.

அதன் அறிக்கை: தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக, தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொய் பரப்புவது, ஆரோக்கியமான அரசியல் இல்லை.

தொகுதி மறுவரையறை குறித்து, அவர் தெரிவித்த அனைத்து விஷயங்களும், பொய்யானவை. அனைத்து மாநிலங்களிலும், தற்போதுள்ள லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை, 50 சதவீதம் உயர்த்தப்படும் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கை, 39ல் இருந்து 59 ஆக உயரும். இதனால், தமிழகத்தின் பிரதிநிதித்துவம், 7.18 சதவீத்தில் இருந்து 7.23 சதவீதமாக உயரும்.

தொகுதி மறுவரையறையால், வட மாநிலங்கள் மட்டுமே பயனடைவதாக ஆதவ் சொல்கிறார். பா.ஜ., அரசுக்கு அதுதான் நோக்கம் எனில், உத்தர பிரதேசத்திற்கு 140 தொகுதிகள் கிடைக்கக் கூடிய, 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலான, தொகுதி மறுவரையறையை நேரடியாக அமல்படுத்தியிருப்பர்.

ஆனால், அனைத்து மாநிலங்களின் பிரதிநிதித்துவமும் காக்கப்பட வேண்டும் என்ற நோக்கில், ஒருங்கிணைந்த அளவில், 50 சதவீதம் உயர்வு என்ற விதிமுறையால், தமிழகத்திற்கு மேலும் 20 எம்.பி.,க்கள் கூடுதலாக கிடைக்க, மத்திய பா.ஜ., அரசு வழிவகுத்துள்ளது. இதை கண்மூடித்தனமாக எதிர்ப்பது, காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது.

தொகுதி மறுவரையறை குறித்து, ஆதவ் அர்ஜுனா சொல்லும் பொய்கள் அனைத்தும், லோக்சபாவில் மசோதா தாக்கல் செய்யப்பட்ட அடுத்த நொடியே துாள் துாளாகி விடும்.

இந்த விவகாரத்தில், பா.ஜ., மற்றும் அமித் ஷா கூறுவது அனைத்தும் உண்மை என நிரூபணமானால், தோல்வியை ஒப்புக் கொண்டு, அரசியலை விட்டே வெளியேறும் திராணி, ஆதவ் அர்ஜுனாவுக்கு இருக்கிறதா? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.