அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை முடக்கியது திமுக அரசு: ஆதவ் பேச்சால் வாக்குவாதம்
சென்னை: ''அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை முடக்கியது தி.மு.க., அரசு,'' என, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தி.மு.க., -- ராஜா: முஸ்லிம்களை தி.மு.க., வினர் அவதுாறாக பேசியதாக, இரு நாட்களுக்கு முன், எம்.எல்.ஏ., ஒருவர் குறிப்பிட்டார். பீஸ்ட் திரைப்படம் வந்தபோது, இன்றைய முதல்வர், முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுகிறார் என குற்றஞ்சாட்டியவர் அவர். அதற்கு இப்போது பதில் அளிப்பாரா?
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: திரைப்படம் என்பது ஒவ்வொருவரின் பார்வையை பொறுத்தது. கடந்த 1999 முதல் 2004 வரை, கருணாநிதி பேசியதை எங்களால் பேச முடியும். 'ஆர்.எஸ்.எஸ்., சமூக இயக்கம்' என, இதே சட்டசபையில் அவர் பேசியுள்ளார். கோத்ரா கலவரத்தில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டபோது, மத்திய பா.ஜ., அரசில் தி.மு.க., இருந்தது; அப்போது, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யாதது ஏன்?
கடந்த 75 ஆண்டுகளில், தமிழகம் முழுதும் பட்டியலின மக்கள் 30 சதவீதத்தினர், குடிசையில் தான் வசிக்கின்றனர். சென்னையில் 40 சதவீதம், வட சென்னையில் 60 சதவீதம் குடிசை பகுதிகள் உள்ளன.
தி.மு.க., - கோவி.செழியன்: பட்டியலின மக்களுக்கு முதன்முதலில், 'கான்கிரீட்' வீடுகள் கட்டித் தந்தது தி.மு.க., அரசு தான். இத்திட்டம் தான் நாடு முழுதும் செயல்படுத்தப்பட்டது. அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கியதும் தி.மு.க., அரசு தான்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: உச்ச நீதிமன்ற தடை நீங்கியதால், கடந்த தி.மு.க., ஆட்சியில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் கொண்டு வரப்பட்டது. பட்டியலின சமூகத்தினர் எவ்வளவு பேர் அர்ச்சகராக்கப்பட்டனர் என்பதை, தி.மு.க.,வினர் தெரிவிக்க வேண்டும்.
தி.மு.க., - சேகர்பாபு: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ், தி.மு.க., ஆட்சியில் 32 பேர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டனர். 'ஆகம கோவில்கள் எவை; ஆகமம் இல்லாத கோவில்கள் எவை என்பதை கண்டறிந்த பிறகே, அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும்' என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இப்போது இதை தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு, த.வெ.க., அரசிடம் உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வாதாடி, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: சில மதவாதிகளின் அழுத்தத்தால், வழக்கை போட வைத்து, அவர்களே இந்த திட்டத்தை முடக்கி விட்டனர். உச்ச நீதிமன்றத்தில் வென்று, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை உறுதியாக செயல்படுத்துவோம். இவ்வாறு விவாதம் நடந்தது.