அனுமதி வழங்கப்படாத பொதுக் கூட்டங்களில் பங்கேற்ற பெண்மீது குற்றச்சாட்டு
மெர்லயன் பூங்காவிலும் ஆண்டர்சன் பாலத்திலும் ஃபாலுன் கொங் பொதுக் குழுவிற்கு ஆதரவாக நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் பங்கேற்றதன் தொடர்பில் 62 வயதுப் பெண்மீது வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 25) குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கும் இவ்வாண்டு பிப்பிரவரி மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற அனுமதி வழங்கப்படாத பொதுக் கூட்டங்களில் கலந்துகொண்ட இங் சாய் ஹுவேய்மீது ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
சிங்கப்பூரரான அவர், 2001, 2005, 2007 ஆகிய ஆண்டுகளில் அதேபோன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்.
அனுமதியில்லாத பொதுக் கூட்டங்களில் கலந்துகொண்டதற்காக 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம், இங்கிற்கு 12 மாத எச்சரிக்கை வழங்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.
கடந்தகாலக் குற்றச்சாட்டுகளையும் நிபந்தனையுடன் கூடிய எச்சரிக்கையையும் மீறி இங் தொடர்ந்து அதே குற்றத்தை மீண்டும் புரிந்ததாக அது சொன்னது.
தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுப்பதாகவும் குற்றத்தை ஒப்புக்கொள்ளப்போவதில்லை என்றும் இங்கின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
இங்கின் வழக்குக்கு முந்தைய கலந்துரையாடல் அக்டோபர் 26ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
1999ஆம் ஆண்டு ஃபாலுன் கொங் என்ற குழுவிற்குச் சீனா தடைவிதித்தது. சிங்கப்பூரில் அந்தக் குழுவிற்கு எந்தவிதத் தடையும் விதிக்கப்படவில்லை என்றபோதும் பொது இடங்களில் ஐந்திற்கு மேற்பட்டோர் ஒன்றுகூட சட்டப்படி காவல்துறையின் அனுமதியைப் பெற்றிருக்கவேண்டும்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
“பிற நாடுகள் அல்லது வெளிநாட்டு அமைப்புகளின் அரசியல் காரணங்களை முன்னிறுத்தும் பொதுக் கூட்டங்களுக்கு காவல்துறை அனுமதி வழங்காது. அவை, உணர்வுகளைத் தூண்டி, பொது அமைதியைக் குலைக்கும் சம்பவங்களுக்கு இட்டுச்செல்லக்கூடும்,” என்று காவல்துறை அறிக்கை வெளியிட்டது.