அராஜக ஆட்சி நடத்திய மம்தா: திரிணமுல் கட்சியில் இருந்து வெளியேறிய எம்பி குற்றச்சாட்டு
கோல்கட்டா: திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான சுகேந்து சேகர் ரே தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகி உள்ளார்.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அக்கட்சியில் உட்கட்சி மோதல் நிலவி வருகிறது. அக்கட்சியில் இருந்து பல தலைவர்கள் வெளியேறி உள்ளனர். மம்தாவால் நீக்கப்பட்டவர் சட்டசபை எம்எல்ஏக்கள் குழு தலைவராக தேர்வாகி உள்ளார். போலி கையெழுத்து போட்ட விவகாரத்தில் மம்தாவின் உறவினரான அபிஷேக் பானர்ஜி விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளார்.
இந்நிலையில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்பியான சுகேந்து சேகர் ரே, ராஜ்யசபா எம்பி பதவியில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகி உள்ளார்.
அவர் தனது கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது: சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், பாஜவுக்கு ஆதரவாக மக்கள் மகத்தான ஆதரவு அளித்து உள்ளனர். இதன் மூலம் கட்டுக்கடங்காத ஊழல், பெண்களுக்கு எதிரான அட்டூழியங்கள், சட்டம் ஒழுங்கு, வேலைவாய்ப்பு போன்ற துறைகளில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு காரணமான மம்தாவின் 15 ஆண்டுகால அராஜக ஆட்சியினால் ஏற்பட்ட அதிருப்தியே மக்கள் இந்த முடிவை கொடுத்துள்ளனர்.
மேற்கு வங்கத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் பணியை புதிய அரசு துவங்கி உள்ளது.மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொண்டு ராஜ்யசபா எம்பி பதவியில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுகிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.