📅 Saturday, 15 August 2026 IST | ஆடி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics June 03, 2026 09:00 AM

அரசியல் செய்யாத த.வெ.க... கோட்டைவிடுகிறாரா முதல்வர் விஜய்?

அரசியல் செய்யாத த.வெ.க... கோட்டைவிடுகிறாரா முதல்வர் விஜய்?

அரசியல் செய்யாத த.வெ.க... கோட்டைவிடுகிறாரா முதல்வர் விஜய்?

யாருடனும் அமர்ந்து அரசியல் பேசுவதில் முதல்வருக்கு ஆர்வம் கிடையாது. அமைச்சர்கள் சந்திப்பதையேகூட அவர் விரும்புவதில்லை.

த.வெ.க ஆட்சியமைந்து 20 நாள்களுக்கு மேல் கடந்துவிட்டன. ‘பார்ட்டி ஃபண்ட் வசூலிக்கப்படாது’, ‘டெண்டர்களில் வெளிப்படைத்தன்மை’, ‘சட்டமன்ற நடவடிக்கைகள் முழு நேர ஒளிபரப்பு’, ‘717 டாஸ்மாக் கடைகள் மூடல்’ என்று நிர்வாகரீதியாக பல ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், அரசியல்ரீதியாக தொடர் சறுக்கலைச் சந்தித்துவருகிறது த.வெ.க அரசாங்கம். “கூட்டணியில் இருப்பவர்களுக்காகக் குரல் கொடுக்கக்கூடத் தயங்குகிறார் முதல்வர் விஜய். பிறகு எப்படிக் கூட்டணி ஜெல் ஆகும்?” என்று அங்கலாய்க்கிறார்கள் கம்யூனிஸ்ட்டுகள். எங்கே, ஏன் சறுக்குகிறது த.வெ.க?

முதல் பந்தை நழுவவிட்ட முதல்வர்!

நம்பிக்கைத் தீர்மானத்துக்காகக் கூடிய முதல் சட்டமன்றக் கூட்டத்திலேயே, அரசியல்ரீதியாக சறுக்கத் தொடங்கிவிட்டது த.வெ.க அரசாங்கம். தீர்மானத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, “கூவத்தூரை மிஞ்சும் அளவுக்கு நீங்கள் அடிக்கிற கூத்தைப் பார்க்கும்போது, ‘இந்த அரசு எத்தனை நாள் நீடிக்கப்போகிறது?’ என்று மக்களுக்குச் சந்தேகம் வர ஆரம்பித்திருக்கிறது. ரீல்ஸ் ஆட்சியாக இல்லாமல் ரியல் ஆட்சியாக நடத்துங்கள்...” என்று சபையிலேயே காட்டமாக விமர்சித்தார்.

உதயநிதியின் விமர்சனத்துக்கு சபையிலேயே முதல்வர் பதிலளித்திருந்தால் அவைக்குறிப்பில் இடம்பெற்றிருக்கும். சபையில் அமைதியாக இருந்துவிட்டு, “தமிழகத்தின் முக்கால்வாசி மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு கட்சி, 35 சதவிகித மக்களின் ஆதரவுடன் வெற்றிபெற்ற கட்சியைப் பார்த்து ஏளனமாகப் பேசுவதன் காரணம் என்ன என்பதை மக்கள் அறியாதவர்களா என்ன?” என்று சாவகாசமாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் பதிலளித்தார் முதல்வர். அதுவே, “வீட்டுக்குப் போய் பதிலளிக்கிறார்” என்று விமர்சனமாகிவிட்டது. அரசியல்ரீதியாக தி.மு.க-வை எதிர்கொள்ளும் வாய்ப்பை, முதல் பந்திலேயே நழுவவிட்டுவிட்டார் முதல்வர் விஜய்.

நம்மிடம் பேசிய த.வெ.க-வின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சிலர், “பல கட்சிகளுடன் ஒன்று சேர்ந்துதான் ஆட்சியை நடத்துகிறோம் என்ற எண்ணமே முதல்வரிடம் இல்லை. கேரள முன்னாள் முதல்வரும், சி.பி.எம் கட்சியின் சீனியர் தலைவருமான பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதைக் கண்டித்து முதல்வரிடமிருந்து ஓர் அறிக்கையும் வரவில்லை. சோதனைக்கு எதிராகப் போராடிய சி.பி.எம் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி டெல்லி போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார். அதையும் கண்டிக்கவில்லை.

‘ஜெல்’ ஆகாத கூட்டணி!

கடைசியாக, ‘அமலாக்கத்துறை சோதனையை முதல்வர் கண்டிக்க வேண்டும்’ என சி.பி.எம் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் செல்வா கூறியும்கூட, இதுவரை வாய் திறக்கவில்லை முதல்வர். அமலாக்கத்துறை ரெய்டை பா.ஜ.க-வுக்கு எதிரான போராட்டமாக மாற்றியிருக்கலாம். கூட்டணித் தலைவர்களை ஒன்று திரட்டி, மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டமும் நடத்தியிருக்கலாம். ‘பா.ஜ.க-விடம் பணிந்துபோகிறார் விஜய்’ என்ற பிம்பமும் உடைந்துபோயிருக்கும். வாய்ப்புகளைக் கோட்டைவிட்டுவிட்டார் முதல்வர். அதேசமயம், அமலாக்கத்துறை சோதனையைக் கண்டித்து முன்னாள் முதல்வர் ஸ்டாலின் ‘ஸ்கோர்’ செய்துவிட்டார்.

கேரள முதலமைச்சராக சதீசன் பதவியேற்பு விழாவுக்கும் செல்லாமல், டெல்லி வரை சென்றும் ராகுலைச் சந்திக்காமல் முதல்வர் திரும்பியதில் காங்கிரஸ் கட்சியும் கடுப்பில்தான் இருக்கிறது. வி.சி.க-வைச் சேர்ந்த ரவிக்குமார், ஏழு வருடங்களாக எம்.பி-யாக இருக்கிறார். இத்தனை வருடமும் இல்லாமல், இந்த வருடம் அவருக்கு, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. இந்த ரவிக்குமார்தான், வி.சி.க தலைவர் திருமாவளவனிடம் பேசி த.வெ.க-வுடன் கூட்டணி அமைக்க உதவியாக இருந்தவர். த.வெ.க அரசு அமைவதற்கும் உறுதுணையாக இருந்தவர். அவரை அமித் ஷாவே வாழ்த்திவிட்ட நிலையில், இதுவரை முதல்வர் விஜய் வாழ்த்தவில்லை.

அதேபோல் அண்மையில் லோக்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்ததையும் முதல்வர் கண்டிக்கவில்லை. இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் முதல்வரின் பாராமுகத்தால், கூட்டணிக்குள் மனக்கசப்புகள் உருவாகத் தொடங்கி யிருக்கின்றன. அதை பா.ஜ.க மேலிடம் ரசித்து மேலும் கிளறுகிறது. ஆட்சியமைக்கும்போது கூட்டணித் தலைவர்களைச் சந்தித்த முதல்வர், மீண்டும் யாரையும் சந்திக்கவில்லை. அவரது பர்சனல் தொடர்பு எண்கூட, பல தலைவர்களிடம் கிடையாது. சந்திக்கும்போதுதான், பல அரசியல் கருத்துகளை விவாதிக்க முடியும். கூட்டணியை மேலும் ‘ஜெல்’ ஆக்க முடியும். அதற்கான வாய்ப்பை முதல்வர் தருவதேயில்லை” என்று வருத்தப்பட்டனர்.

அரசியல் செய்வதற்கு ராஜசேகர் வரவில்லை, ஜான் கண்டுகொள்ளவில்லை என்று சால்ஜாப்பு காரணங்களைச் சொல்வது, 35 சதவிகித வாக்குகளைப் பெற்ற ஒரு கட்சிக்கு அழகல்ல. கூட்டணிக்குள் மன சஞ்சலங்கள் எழுந்திருக்கும் நிலையில், அவற்றை எதிர்கொள்ளும் பொறுப்பு ஒரு கட்சியின் தலைவராக முதல்வர் விஜய்க்கு இருக்கிறது. செய்தால் அவருக்கு நல்லது!