அரசியல் நிலைப்பாடு குறித்து விரைவில் முடிவு: மதிமுக
சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) அண்மைக் காலமாக தவெகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படையாக எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
மதிமுக பொதுச் செயலர் வைகோ, முதன்மைச் செயலர் துரை வைகோ ஆகியோர் மதிமுகவின் அரசியல் நிலைப்பாடு குறித்து கட்சி பொதுக்குழுவில் நிர்வாகிகளின் கருத்தை அறிந்து தலைமை முடிவு செய்யும் என்று கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜூன் 26ஆம் தேதி மதிமுக உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் அவைத் தலைவர் ஆ.அர்ஜுனராஜ் தெரிவித்துள்ளார்.
உயர்நிலைக் கூட்டத்தில் அரசியல் ரீதியான செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டு, நிர்வாகிகளின் கருத்துகளைக் கேட்டு தலைமை முடிவெடுக்கும் என்று ம.தி.மு.க முதன்மைச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான துரை வைகோ முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
எனவே, அந்தக் கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால், திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகி விஜய்யின் தவெகவுடன் கூட்டணிசேர வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, துரை வைகோ தவெகவுக்கு ஆதரவு தருவது குறித்த செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு, “எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் துரதிருஷ்டவசமாக திமுக சின்னத்தில் போட்டியிட்டார்கள். எனவே, தவெகவுக்கு ஆதரவு கொடுக்கக்கூடிய சூழ்நிலையில் நாங்கள் இல்லை. குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காக காங்கிரஸ், கம்யூனிஸ்ட், இந்திய முஸ்லிம் லீக் கட்சி உள்ளிட்ட இயக்கங்கள் ஆதரவு கொடுத்திருக்கிறார்கள்,” என்று கூறியிருந்தார்.
திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா என்று செய்தியாளர்கள் முன்பு கேட்ட கேள்விக்கு, துரை வைகோ, “விரைவில் மதிமுக பொதுக்குழு கூட்டப்படவுள்ளது. அந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் திமுக கூட்டணியில் தொடர வேண்டுமா என்பது கேட்கப்பட்டு, நிர்வாகிகளின் மனநிலைப்படி முடிவு எடுக்கப்படும்,” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
எனவே, அண்மையில் இந்திய முஸ்லிம் லீக் கட்சி, திமுகவில் இருந்து விலகியதைப்போல் மதிமுகவும் திமுகவை விட்டு விலகக்கூடும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.