📅 Sunday, 13 September 2026 IST | ஆவணி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 28, 2026 11:30 AM

அரசு சார்பில் ஆண்டுதோறும் வெள்ளித்திரை, சின்னத்திரை விருதுகள் வழங்கப்படும்

அரசு சார்பில் ஆண்டுதோறும் வெள்ளித்திரை, சின்னத்திரை விருதுகள் வழங்கப்படும்

அரசு சார்பில் ஆண்டுதோறும் வெள்ளித்திரை, சின்னத்திரை விருதுகள் வழங்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

நல்ல சிறு படங்களுக்கு அரசு சார்பில் மானியத்தை வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக பள்ளிக்கல்வி மற்றும் செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

Published : July 28, 2026 at 10:58 AM IST

‎சென்னை: முதலமைச்சரின் அனுமதியுடன் வெள்ளித்திரை, சின்னத்திரை விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர் யூனியனின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பள்ளிக்கல்வி மற்றும் செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்மோகன், புதிய நிர்வாகிகளுக்கு அடையாள அட்டையை வழங்கினார்.

‎இந்நிகழ்ச்சியில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் ஜி.கே.எம் தமிழ் குமரன், இயக்குநர் சேரன், ஆர்.கே. செல்வமணி, ஆர்.வி. உதயகுமார், ரவி மரியா, நடிகர்கள் அசோக் செல்வன், அர்ஜுன் தாஸ், நடிகர் ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் ஜி.கே.எம். தமிழ்குமரன், “‎தயாரிப்பாளர் சங்கத்திற்கு என்று கட்டிடம் இல்லை. முதலமைச்சரின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் எப்போது வந்தாலும், தயாரிப்பாளர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டுங்கள் என்று எங்களிடம் சண்டை போடுவார். எனவே எங்களுக்கு கட்டிடம் கட்டுவதற்கு இடம் மட்டும் கொடுங்கள், நாங்கள் கட்டிடத்தை கட்டிக்கொள்கிறோம். இதனை அமைச்சர் ராஜ்மோகனிடம் கோரிக்கையாக வைக்கிறோம்” என்றார்.

பின்னர் இயக்குநரும், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவருமான சேரன் பேசுகையில், “‎சுயநலமாக இங்கு கேட்காமல், நேரடியாக உங்களிடம் வந்து கேட்கிறோம். ‎எத்தனையோ கோரிக்கைகளை வைத்துள்ளோம், கடந்த ஆட்சியாளர்கள் சிலவற்றை நிறைவேற்றி இருக்கிறார்கள், பலவற்றை நிறைவேற்றவில்லை. காரணம் அவர்கள் எங்களிடம் அமர்ந்து பேசவில்லை” என கூறினார்.

இதனைத்தொடர்ந்து நடிகர் ரவி மரியா பேசுகையில், “‎சாலையோர கடையில் நான் சாப்பிட சென்ற போது, தவெகவில் இணைந்துவிட்டீர்களா? என்று முதலமைச்சரின் தந்தை எஸ்ஏசி என்னிடம் கேட்டார். அப்போது நானும், விஜயும் 30 ஆண்டுகளுக்கு மேலாக நெருங்கிய நண்பர்கள் என்றேன். இதற்கு முன்பு ஒரு நாளைக்கு கவுன்சிலருக்கு 500, காவல்துறைக்கு 500 ரூபாய் என தினமும் 1,000 ரூபாய் கொடுத்து வந்தேன்.

இப்போது தவெக ஆட்சியில் அதை நான் கொடுப்பதில்லை, இதனால் மாதம் 30,000 ரூபாய் தனக்கு மிச்சமாகுவதாக அந்த கடைக்காரர் என்னிடம் கூறினார். ‎பேச்சு திறமையை கொண்டுள்ள ராஜ்மோகன் ஏன் சினிமாவில் இருக்கிறார் என்று நினைத்திருக்கிறேன், ஆனால் தற்போது அவருக்குரிய இடத்தில் இருக்கிறார். இந்த துறையில் இருந்து ஒருவர் முதலமைச்சராக வந்திருப்பது மகிழ்ச்சி” என்றார்.

பின்னர் அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், “‎5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படுவது அல்ல விருது, ஒவ்வொரு ஆண்டும் வழங்குவது தான் விருது. முதலமைச்சரின் அனுமதி பெற்று வெள்ளித்திரை, சின்னத்திரை விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படும். ‎நீங்கள் கடன் பட்டிருப்பதாக சொன்னீர்கள். நாங்கள் தான் கடன் பட்டிருக்கிறோம், அதனை திருப்பி செய்து வருகிறோம். ‎முதலமைச்சர் என்னை அழைத்து, சிறு படங்கள் எடுக்கப்பட்டு வெளிவராமல் இருக்கிறது, நல்ல சிறு படங்களுக்கு அரசு சார்பில் மானியத்தை கொடுத்துவிடுங்கள் என்று கூறியுள்ளார்.

நடிகர் முத்துகாளை உடல் நலம் பாதிக்கப்பட்ட போது அவர் என்னை அழைக்கவில்லை, நானே சென்று மருத்துவமனைக்கு சென்று பார்த்தேன். பாக்யராஜ் சார் மறைந்த போது உடனே சென்று அரசு சார்பில் மரியாதை செலுத்தினோம், இதெல்லாம் எங்கள் கடமை. முதலமைச்சரிடம் கூறி உங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற என்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்வேன்” என்றார்.