📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health May 27, 2026 10:32 PM

அரசு சுகாதார நிலையம் குடியிருப்பா.?

அரசு சுகாதார நிலையம் குடியிருப்பா.?

அரசு சுகாதார நிலையம் குடியிருப்பா.? - செவிலியர் சஸ்பெண்ட்

கோவையில் சுகாதார நிலையத்தை ஆக்கிரமித்து வீடாக மாற்றிய செவிலியர் கனிதா பணியிடை நீக்கம் மாவட்ட சுகாதார துறை அதிகாரி நடவடிக்கை

கோவை, வடவள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தை செவிலியரின் கணவரும் திமுக பிரமுகரும் குடியிருப்பாக பயன்படுத்தி வருவதாக சமூகவலை தளங்களில் வீடியோ வைரலானது. இதுகுறித்து பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் துணை சுகாதார நிலையமாக செயல்பட்டு வந்த கட்டிடத்தில் பணி புரிந்து வந்த கனிதா என்ற நகர்ப்புற சுகாதார செவிலியர், அங்கேயே குடியிருக்க அனுமதி வழங்கப்பட்டு இருப்பதும் , நான்கு அறைகளைக் கொண்ட அந்த கட்டிடத்தில் இரண்டு அறைகள் குடியிருப்பிற்கும், இரண்டு அறைகள் ஆரம்ப சுகாதார நிலையமாக பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

ஆனால் அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலாக ஒரு அறையை குடியிருப்பிற்காக கனிதா பயன்படுத்தி வருவதும் தெரிய வந்தது. மேலும் கனிதாவின் கணவர் தி.மு.க வில் பொறுப்பாளராக இருப்பதால் இந்த துணிச்சல் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்பாக பயன்படுத்துவதாக எழுந்த புகாருக்கு, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில் வடவள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கடந்த பிப்ரவரி மாதம் 14 ம் தேதி திறக்கப்பட்டது., ஏற்கனவே, வடவள்ளியில் இருந்த 4 அறைகள் கொண்ட பழைய ஆரம்ப சுகாதார அலுவலகம், துணை சுகாதார நிலையமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அரசு கட்டிடத்தில் குடியிருந்த சர்ச்சை

அதில், நகர்புற சுகாதார செவிலியர் கனிகா அங்கு பணியமர்த்தபட்டு கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை, குழந்தைகளுக்கு தடுப்பூசி, சிறு உபாதைகளுக்கான சிகிச்சை அளித்து வந்துள்ளார். இந்நிலையில், சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்ட பகுதிகளில் கனிதா மற்றும் அவரது கணவர் ஷியாம் சுந்தர் வீட்டு உபயோக பொருட்களை வைத்து இருந்தது தொடர்பாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்திரவிடப்பட்டுள்ளதாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை தெரிவித்துள்ளது.

மேலும் இதை கவனிக்க தவறிய மாநகர சுகாதார அலுவலரிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது எனவும், துணை சுகாதார நிலைய கட்டிடத்தில் உள்ள 4 அறைகளில் 2 அறைகளை பொது மக்கள் சிகிச்சைக்கு பயன்படுத்தவும், 2 அறைகளை மட்டும் தங்கிக் கொள்ள பயன்படுத்தவும் அறிவுறுத்தபட்டு உள்ளது எனவும், இரு சிகிச்சை அறைகளுக்கும், இரு குடியிருப்பு அறைகளுக்கும் இடையில் சுவர் எழுப்பவும், குடியிருப்பு பகுதிக்கு என தனிவாசல் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க உத்திரவிடப்பட்டுள்ளதாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை விளக்கம் அளித்து உள்ளது. இந்நிலையில் தங்கிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டதை விட கூடுதலான அறையை பயன்படுத்தியது தொடர்பாக, வடவள்ளி துணை சுகாதார நிலைய செவிலியர் கனிதாவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரி பாலுசாமி உத்தரவிட்டார்..