📅 Tuesday, 22 September 2026 IST | புரட்டாசி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology September 22, 2026 10:05 PM

அரசு மருத்துவமனைக்குள் புகுந்து பெண் ஊழியருக்கு தீ வைத்த கொடூரன் சுடுகாட்டில் சுட்டுப்பிடித்த போலீசார்

அரசு மருத்துவமனைக்குள் புகுந்து பெண் ஊழியருக்கு தீ வைத்த கொடூரன் சுடுகாட்டில் சுட்டுப்பிடித்த போலீசார்

பொன்னேரி: அரசு மருத்துவமனை வளாகத்தில், பெண் ஊழியர் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த விவகாரத்தில், சுடுகாட்டில் பதுங்கியிருந்த கொடூரனான, 38 வயது ஆட்டோ டிரைவரை, துப்பாக்கியால் சுட்டு பிடித்து போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த உப்பரப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 38. பொன்னேரி அரசு மருத்துவமனையில், தற்காலிக கணினி ஆப்பரேட்டராக பணிபுரிந்து வருகிறார்.

பணி முடிந்து நேற்று முன்தினம் இரவு மருத்துவமனையில் இருந்து, ராஜேஸ்வரி வெளியே வந்தார். மர்மநபர் ஒருவர், மருத்துவமனை வளாகத்திலேயே, இவர் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து விட்டு தப்பினார்.

பலத்த தீக்காயம் அடைந்த ராஜேஸ்வரி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பொன்னேரி போலீசார் வழக்கு பதிந்து, மர்மநபரை தேடி வந்தனர்.

இந்நிலையில், மாதவரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரகாஷ், 38, என்பவர், ராஜேஸ்வரியை தீவைத்து கொலை செய்ய முயன்றது தெரிந்தது. அவருடைய மொபைல் போன் சிக்னலை வைத்து, பொன்னேரி அடுத்த பெருஞ்சேரி கிராமத்தின் சுடுகாடு பகுதியில், அவர் பதுங்கியிருப்பதை போலீசார் அறிந்தனர்.

பொன்னேரி இன்ஸ்பெக்டர் சிவக்குமார், எஸ்.ஐ., தமிழரசன் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். போலீசாரை கண்டதும் பிரகாஷ் தப்பியோட முயன்றார். எஸ்.ஐ., தமிழரசன் அவரை பிடித்தார்.

அப்போது, கையில் வைத்திருந்த அரிவாளால், தமிழரசனை வெட்டிவிட்டு, பிரகாஷ் தப்ப முயன்றார். உடனே, இன்ஸ்பெக்டர் சிவக்குமார், துப்பாக்கியால் பிரகாஷின் காலில் சுட்டார். பிரகாஷ் அங்கே சுருண்டு விழுந்தபோது, போலீசார் அவரை பிடித்து கைது செய்தனர்.

பொன்னேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிரகாஷ், மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காயம் அடைந்த எஸ்.ஐ., தமிழரசன், பொன்னேரி அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை, ஆவடி இணை கமிஷனர் சிவக்குமார் சந்தித்து நலம் விசாரித்தார்.

விசாரணைக்குப்பின் போலீசார் கூறியதாவது:

ராஜேஸ்வரிக்கும், பிரகாஷிற்கும், ஓராண்டாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. திடீரென மனக்கசப்பு ஏற்பட்டு சில தினங்களாக, பிரகாஷிடம் இருந்து ராஜேஸ்வரி விலகி இருந்துள்ளார். பிரகாஷின் மொபைல் போன் எண்ணை 'பிளாக் லிஸ்ட்'டில் போட்டு, தொடர்பை துண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பிரகாஷ், பணி முடிந்து ராஜேஸ்வரி வரும் நேரம் வரை காத்திருந்து, அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு தப்பியுள்ளார்.

தற்போது, பிரகாஷ் மருத்துவ சிகிச்சையில் உள்ளதால், கூடுதல் விபரங்களை பெறுவதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. அடுத்தகட்ட விசாரணைக்கு பின், கொலை முயற்சிக்கான முழு விபரம் தெரிய வரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

'மருத்துவமனைக்கு கூடுதல் பாதுகாப்பு' கொலை முயற்சி குறித்து, திருவள்ளூர் கலெக்டர் கவிதா, மருத்துவமனையில் நேற்று விசாரணை நடத்தினார். பின், கலெக்டர் கவிதா கூறியதாவது: பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண் ஊழியர், தற்போது வென்டிலேட்டர் உதவியின்றி சிகிச்சை பெற்று வருகிறார். குற்றவாளி கைது செய்யப்பட்டு உள்ளார். மருத்துவமனையில் கூடுதல் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தனிப்பட்ட முன்பகை காரணமாகவே, இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. நோயாளிகள் மீதான தாக்குதல் ஏதும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.