📅 Monday, 14 September 2026 IST | ஆவணி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology July 30, 2026 02:33 AM

அரசு பேருந்துகளில் செல்போன் பயன்படுத்த கட்டுப்பாடுகள்

அரசு பேருந்துகளில் செல்போன் பயன்படுத்த கட்டுப்பாடுகள்

அனைத்து போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர்களுக்கும் அரசு செயலாளர் நிர்மல் ராஜ் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:-

மோட்டார் வாகன (ஓட்டுதல்) ஒழுங்குமுறை விதிப்படி, பேருந்துகளில் உரத்த ஒலியுடன் இசை ஒலிக்கப்படாமல் இருப்பதை டிரைவர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும், தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் விதிப்படி, சக பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் எந்தவொரு செயலும் முறைகேடாக கருதப்படும்.

அதன்படி பயணிகள் செல்போனில் உரத்த குரலில் பேசுவதையும், ‘ஸ்பீக்கர்' மூலம் இசை கேட்பதையும், காணொலிகளை பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும். 'இயர்போன்' அல்லது 'ஹெட்போன்' பயன்படுத்தாமல் இசை கேட்பது மற்றும் வீடியோ பார்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் செல்போன் பயன்பாடு மற்றவர்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்காத வகையில் இருக்க வேண்டும்.

இந்த விதிமுறைகளை அனைத்து பேருந்துகளிலும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். பேருந்துகளின் முன்பக்க கதவு, நடுப்பகுதி மற்றும் பின்பக்க கதவு ஆகிய இடங்களில் பயணிகளுக்கு தெளிவாக தெரியும் வகையில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும்.

அதில், செல்போனில் 'ஸ்பீக்கர்' ஒலியை தவிர்க்க வேண்டும் என்றும், 'இயர்போன்' அல்லது 'ஹெட்போன்'களை பயன்படுத்தி சக பயணிகளை மதிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட வேண்டும். 'அமைதியான பயணம் பாதுகாப்பான பயணம்' என்ற வாசகத்துடன் இந்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் இடம்பெற வேண்டும்.

மேலும், பணி நேரத்தின்போது டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு இந்த வழிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க அறிவுறுத்த வேண்டும். இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டதற்கான புகைப்பட ஆதாரங்களுடன் கூடிய அறிக்கையை தலைவர் அலுவலகம் மற்றும் அரசிற்கு விரைந்து சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.