அரசு ஊழியர்களுக்கான TAPS ஓய்வூதியத் திட்டம் அமலாவது எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்
அரசு ஊழியர்களுக்கான TAPS ஓய்வூதியத் திட்டம் அமலாவது எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்
"TAPS திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கூடுதல் கடன் பெறுவதற்கான அனுமதி கிடைக்க வேண்டும். அதுவரை, 2026 ஜனவரி 1 மற்றும் அதற்குப் பிறகு ஓய்வு பெறுபவர்களுக்கு இடைக்காலமாக ஒரு தொகையை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன"
Published : August 10, 2026 at 9:15 PM IST
சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான TAPS ஓய்வூதியத் திட்டம் எப்போது அமலுக்கு வரும்? என சட்டப்பேரவையில் நிதியமைச்சர் மரிய வில்சன் விளக்கம் அளித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் தமிழ்நாடு உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) குறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து நிதியமைச்சர் மரிய வில்சன் அளித்த பதில்:
TAPS திட்டம் தொடர்பாக கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் ஒரு குழு அமைக்கப்பட்டது. ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையிலான அந்தக் குழு தனது பரிந்துரைகளை அரசிடம் வழங்கியுள்ளது.
அந்தக் குழுவின் பரிந்துரையில், TAPS திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதியைப் பெற ஒன்றிய அரசிடம் இருந்து கூடுதல் கடன் பெறுவதற்கான அனுமதி கிடைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுவரை, 2026 ஜனவரி 1 மற்றும் அதற்குப் பிறகு ஓய்வு பெறுபவர்களுக்கு இடைக்காலமாக ஒரு தொகையை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த இடைக்கால நிவாரணத்தை விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ஒன்றிய அரசு கூடுதல் கடன் பெற அனுமதி அளித்தவுடன், TAPS திட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது.
மேலும், ஒன்றிய அரசின் ஒப்புதல் கிடைத்துவிட்டால், வரவிருக்கும் துணை நிதிநிலை அறிக்கையில் TAPS திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு நிச்சயமாக இடம்பெறும்" எனத் தெரிவித்தார்.
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு, "கடந்த ஆட்சிக் காலத்தில் TAPS திட்டம் தொடர்பாக குழுவின் பரிந்துரையைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், திட்டத்தை உறுதி செய்து அதற்கான ஆணையும் பிறப்பிக்கப்பட்டு விட்டது. இத்திட்டத்துக்காக ரூ.11 ஆயிரம் கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது.
தற்போது அந்த ரூ.11 ஆயிரம் கோடியில் மேலும் ரூ.3 ஆயிரம் கோடியை சேர்த்து மொத்தம் ரூ.14 ஆயிரம் கோடி அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதையே சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் வலியுறுத்துகிறார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
TAPS திட்டம் தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டதோடு மட்டுமல்லாமல், குழுவின் பரிந்துரையைப் பெற்று, திட்டத்தை உறுதி செய்து, அதற்கான அரசாணையை பிறப்பித்து, ரூ.11 ஆயிரம் கோடி நிதியையும் ஒதுக்கிவிட்டுத்தான் நாங்கள் ஆட்சியை விட்டு வந்தோம்" என எ.வ. வேலு கூறினார்.