“அரசு வேலை தரேன்னு சொன்னாங்க”.. உலகக்கோப்பை வென்றும் தவிக்கும் பார்வையற்றோர் கிரிக்கெட் வீராங்கனைகள்
“அரசு வேலை தரேன்னு சொன்னாங்க”.. உலகக்கோப்பை வென்றும் தவிக்கும் பார்வையற்றோர் கிரிக்கெட் வீராங்கனைகள்
விசாகப்பட்டினம்: கடந்த 2025 நவம்பரில் நடைபெற்ற முதல் பார்வையற்றோர் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தீபிகா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது. இந்தியாவிற்கு பார்வையற்றோருக்கான முதல் டி20 உலகக்கோப்பையை வென்று தந்து ஒரு ஆண்டு கடந்த நிலையிலும், அரசு அறிவித்த இலவச வீட்டு மனை மற்றும் வேலைவாய்ப்பு கிடைக்காமல் வீராங்கனைகள் தவித்து வருகின்றனர்.
இந்த வரலாற்று வெற்றிக்குப் பிறகு அணியில் இடம்பெற்றிருந்த 16 வீராங்கனைகளுக்கும் அரசு வேலை மற்றும் இலவச வீட்டு மனை வழங்கப்படும் என்று அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் மேடைகளில் வாக்குறுதி அளித்தனர். ஆனால் ஒரு ஆண்டு ஆகியும் இந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
இதுகுறித்து ஆந்திராவைச் சேர்ந்த கேப்டன் தீபிகா கூறுகையில், "எங்களுக்குப் பார்வைக் குறைபாடு உள்ளதால் அரசு அலுவலகங்களுக்கு தொடர்ந்து அலைந்து அதிகாரிகளைப் பார்க்க முடிவதில்லை. அரசே முன்வந்து எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி எங்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்" என்று வேதனையுடன் தெரிவித்தார். இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 45 பந்துகளில் 92 ரன்கள் விளாசி அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் மற்றொரு வீராங்கனையான கருணா குமாரி, தனது குடும்பத்தைக் காப்பாற்ற அரசு வேலை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அசாம், ஒடிசா, மத்திய பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 16 முதல் 28 வயதுடைய இந்த வீராங்கனைகள் அனைவரும் மிகவும் ஏழ்மையான குடும்பப் பின்னணியைக் கொண்டவர்கள். இவர்களுக்கு முறையான மைதான வசதியோ பயிற்சியோ உள்ளூரில் கிடைப்பதில்லை.
இந்நிலையில் ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் நிறுவனம் தனது சமூகப் பங்களிப்பு நிதியிலிருந்து ஒவ்வொரு வீராங்கனைக்கும் தலா 50,000 ரூபாய் உதவித்தொகையை வழங்கியுள்ளது. வரும் டிசம்பர் 2026-ல் நேபாளத்திற்கு எதிரான கிரிக்கெட் தொடர் டெல்லியில் நடைபெறவுள்ள நிலையில், தங்களது வாழ்வாதாரத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என இந்த சாதனை வீராங்கனைகள் கோரிக்கை வைத்துள்ளனர். மத்திய மாநில அரசுகள் இந்த வீராங்கனைகளுக்கு உடனே உதவ வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாகவும் உள்ளது.