📅 Tuesday, 28 July 2026 IST | ஆடி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology July 28, 2026 01:31 PM

அரசுப் பேருந்தில் செல்போன் பயன்படுத்துறீங்களா?... தமிழக அரசு வெளியிட்ட புதிய விதிகள்!

அரசுப் பேருந்தில் செல்போன் பயன்படுத்துறீங்களா?... தமிழக அரசு வெளியிட்ட புதிய விதிகள்!

சென்னை : தமிழக அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் இனி செல்போன்களைப் பயன்படுத்தும் போது சக பயணிகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டும் என்று போக்குவரத்துத் துறை புதிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. பயணிகளின் வசதியான பயணத்தை உறுதி செய்யும் வகையில், போக்குவரத்துத் துறை செயலாளர் நிர்மல் ராஜ் இது தொடர்பான அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் போது சில பயணிகள் செல்போனில் அதிக சத்தமாகப் பேசுவதும், இயர்போன் (Earphone) அல்லது ஹெட்போன் (Headphone) பயன்படுத்தாமல் ஸ்பீக்கரில் பாடல்களைக் கேட்பதும், திரைப்படங்கள் அல்லது வீடியோக்களைப் பார்ப்பதும் சக பயணிகளுக்குப் பெரும் தொந்தரவாக அமைவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன.

இதனைத் தவிர்க்கும் விதமாக, பயணிகள் அனைவரும் செல்போனில் வீடியோ பார்க்கும்போதோ அல்லது பாடல்களைக் கேட்கும்போதோ கட்டாயமாக இயர்போன்களைப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, ஸ்பீக்கர் மோடில் (Speaker phone) சத்தமாகப் பேசுவதையும் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும் எனப் போக்குவரத்து கழகம் பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த புதிய நடைமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்துப் பேருந்தில் ஏறும் பயணிகளுக்கு ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் கட்டாயம் பொறுமையுடன் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பயணிகளுக்கு அறிவுறுத்துவதோடு மட்டுமின்றி, ஓட்டுநர்களும் பேருந்துகளில் அதிக சத்தத்துடன் ஸ்பீக்கர்களில் பாடல்களை ஒலிக்க விடக் கூடாது என்றும் அந்த சுற்றறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிமுறைகளை அனைத்துத் தரப்பு மக்களும் எளிதில் அறிந்துகொள்ளும் வகையிலும், இதனை முழுமையாக நடைமுறைப்படுத்தும் விதமாகவும், அனைத்து அரசுப் பேருந்துகளிலும் இது தொடர்பான விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை (Awareness Stickers) உடனடியாக ஒட்ட வேண்டும் என்றும் போக்குவரத்துத் துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அரசின் இந்த புதிய நடவடிக்கையானது பொதுமக்களின் பேருந்துப் பயணத்தை மேலும் அமைதியானதாகவும், அனைவருக்கும் இடையூறற்றதாகவும் மாற்ற உதவும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.