அரிசி விலை உயர்வுக்கு காரணம் என்ன?
கோப்புப் படம்
சென்னை: “கர்நாடக பொன்னி, ஆந்திர பொன்னி அரிசியின் வரத்து குறைவாக உள்ளது. இதனால் அரிசியின் விலை உயர்ந்துள்ளது. மக்கள் சன்ன ரக அரிசியை அதிகம் பயன்படுத்துகிறார்கள்” என உணவுத் துறை அமைச்சர் வெங்கட்ரமணன் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வெங்கட்ரமணன், “அரிசி விலை 2021-ல் ரூ.47 ஆக இருந்தது, 2023ல் ரூ.53 ஆகவும், 2025-ல் ரூ.60 ஆகவும், இப்போது ரூ.62 ஆகவும் உள்ளது. துவரம் பருப்பு விலை 2021-ல் ரூ.111 ஆகவும், 2023-ல் ரூ.148 ஆகவும் இருந்தது, 2024-ல் ரூ.171 ஆக உயர்ந்தது. திமுக ஆட்சியில் இருந்தபோது விலைவாசி உயர்வு குறித்து அவர்கள் மக்களின் கோரிக்கைகளை கேட்கவே இல்லை.
இப்போது தமிழகத்தில் 2 கோடியே 28 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. அந்த அட்டைகளுக்கு தடையின்றி பொருட்கள் வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அமுதம் அங்காடிகள், கூட்டுறவு சங்க கடைகளில் பொன்னி புழுங்கல் அரிசி ரூ.60-க்கும், துவரம் பருப்பு ரூ.130-க்கும் வழங்குகிறோம்.
கர்நாடக பொன்னி, ஆந்திர பொன்னி அரிசியின் வரத்து குறைவாக உள்ளது. இதனால் அரிசியின் விலை உயர்ந்துள்ளது. மக்கள் சன்ன ரக அரிசியை அதிகம் பயன்படுத்துகிறார்கள். சட்டப்பேரவையில் முதல்வரும் சன்னரக நெல்லுக்கு அதிகளவில் ஊக்கத்தொகை வழங்கியுள்ளார்.
சென்னை உள்ளிட்ட நகரங்களில் சன்னரக அரிசியின் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதற்காக ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து அரிசி இங்கு வருகிறது. அங்கிருந்து அரிசி வரத்து குறைவாக உள்ளதால், விலை அதிகமாகி உள்ளது.
தமிழகத்தில் விளையும் 1 லட்சம் மெட்ரிக் டன் சன்னரக அரிசியை அமுதம் அங்காடி, கூட்டுறவு சங்க கடைகளில் கிலோ ரூ.30-க்கு வழங்கப்படும். தேவைக்கு தகுந்த மாதிரி அரிசியின் அளவு அதிகரிக்கப்படும். அதேபோல துவரம் பருப்பினை ரூ.130-க்கு விற்பனை செய்யவும் வழிவகை செய்துள்ளோம்.
சில குறிப்பிட்ட கட்சிகளின் தலைவர்களுக்கு உள்ள அரிசி ஆலைகள், கடைகள் மூலமாக அரிசியை பதுக்குகிறார்கள். இதனால் அரிசி விலை உயருகிறது. அரிசி பதுக்கலை தடுப்பதற்கான வழிவகைகளை ஆய்வு செய்து வருகிறோம்.
கடந்த ஆண்டு நவம்பர் - டிசம்பர் சீசன் வரை 8 லட்சத்து 11 ஆயிரத்து 777 மெட்ரிக் டன் நெல்லை கொள்முதல் செய்தோம். அதுவே இந்த ஆண்டு 3 லட்சத்து 50 ஆயிரத்து 468 மெட்ரிக் டன் நெல்லை மட்டுமே கொள்முதல் செய்துள்ளோம். இன்னும் இரு மாதங்கள் கொள்முதல் செய்ய வேண்டியுள்ளது.
விலைவாசி உயரும்போது பதுக்கல் அதிகமாகும், இதனை தடுக்க மாவட்டம் தோறும் 7 பேர் கொண்ட குழு செயல்படுகிறது. மற்ற துறைகளும் இதனை கண்காணிக்கும். 3 மாதத்துக்கு ஒரு முறை பாமாயில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். இன்றைய தேதி வரை 2 கோடி 94 லட்சம் பாமாயில் பாக்கெட்டுகள் கையிருப்பு உள்ளது” என்றார்.