📅 Wednesday, 12 August 2026 IST | ஆடி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion August 12, 2026 12:04 AM

அறநிலையத் துறை சார்ந்த குழுவில் அர்ச்சனா கல்பாத்தி ஏன்?

அறநிலையத் துறை சார்ந்த குழுவில் அர்ச்சனா கல்பாத்தி ஏன்?

தமிழகத்தில் உள்ள கோயில்களில் பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்களை தேர்வு செய்யும் குழுவில் சினிமா தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நியமிக்கப்பட்டது குறித்து அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

அறங்காவலர்கள் தேர்வுக் குழுவில் சினிமா தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இடம் பெற்றிருப்பது சர்ச்சையானது. இது குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் அளித்த விளக்கம் ஒன்றில், “ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் வரும் கோயில்களில் அறங்காவலர் குழுக்களை நியமிப்பதில் மாநில அறங்காவலர் குழு முக்கியமான பங்கு வகிக்கிறது.

அதேபோல் இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகளுக்கும் உறுதுணையாக இருக்கக் கூடியதாக அந்தக் குழு செயல்பட போகிறது. அந்த குழுவில் 7 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆன்மிகம் தொடர்பான வழிகாட்டுதலுக்காக மயிலம் பொம்மபுரம் ஆதீனம் குழுவின் தலைவராகவும், சட்டம் தொடர்பான வழிகாட்டுதலுகாக ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அர்ச்சனா கல்பாத்தி நியமனத்தை பொறுத்தவரை, அவரை ஒரு திரைப்பட தயாரிப்பாளராக மட்டுமே பார்ப்பதால் இந்த விமர்சனங்கள் வருகின்றன. எல்லோருக்கும் இரண்டு முகங்கள் இருக்கும். நடிகராக இருக்கக்கூடிய உதயநிதி ஸ்டாலினுக்கு தயாரிப்பாளர் என்ற முகமும், இன்று எதிர்கட்சித் தலைவர் என்ற முகமும் உண்டு. அதுபோலதான் அர்ச்சனா கல்பாத்திக்கும் இன்னொரு முகம் உண்டு. அவர் தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு தனது சொந்த செலவில் நன்கொடை அளித்து திருப்பணிகள் செய்திருக்கிறார்.

அவரது மாமனார் ஸ்ரீனிவாசன் ஒரு தனியார் குழுமத்தில் உள்ளார். அதன்மூலம் தமிழகத்தில் உள்ள பல கோயில்களுக்கு பல்வேறு திருப்பணிகளை செய்திருக்கிறார். அந்தக் குடும்பத்தில் இருந்து பல்வேறு திருப்பணிகள் செய்திருப்பதாலும், அந்த எண்ணம் இருப்பதாலும் அவரை இந்தக் குழுவில் கொண்டு வந்துள்ளோம்.

இதன்மூலம் கோயில்களுக்கு நன்கொடை கொடுத்து திருப்பணிகள் செய்பவர்களை ஊக்குவிக்கிறோம். இந்த குழுவின் செயல்பாடுகள் மிகச் சிறப்பாக இருக்கிறது’ என்று அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் வரும் கோயில்களுக்கு தகுதியான பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்களை தேர்வு செய்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக மாநில அளவில் பிரத்யேக குழு அமைக்கப்பட்டிருந்தது. அதன் பதவிக்காலம் கடந்த ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைந்தது.

இதையடுத்து புதிய குழுவை அமைக்க அரசுக்கு அறநிலையத்துறை ஆணையர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்குமேல் வருவாய் வரும் கோயில்களுக்கு ‘பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்களை’ தேர்வு செய்து பரிந்துரைக்க புதிய மாநிலக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதன் தலைவராக மயிலம் பொம்மபுரம் ஆதீனம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள், துணைத் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி கே.இராமநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், குழுவின் உறுப்பினர் செயலராக அறநிலையத் துறை ஆணையர் திகழ்வார்.

இந்தக் குழுவின் உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ப.ரா.சம்பத், திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரம், பின்னணி பாடகர் த.வேல்முருகன், ஆன்மிகப் பேச்சாளர் மா.சுமதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.