அதிமுக மனுக்கள் மீதான முடிவு நாளை அறிவிப்பு: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்
சென்னை; அதிமுக அளித்துள்ள மனுக்கள் மீதான முடிவை நாளை அறிவிப்பேன் என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் அதிமுகவில் பொதுச் செயலாளர் இபிஎஸ், எஸ்பி வேலுமணி என இரு அணிகளாக பிரிந்தது. பல கட்ட ஆலோசனைகளுக்கு பின்னர், இவ்விரு அணிகளும் தற்போது ஒருங்கிணைந்துள்ளது.
சென்னையில் உள்ள இபிஎஸ் இல்லத்திற்கு எஸ்பி வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், கேசி வீரமணி, கேபி அன்பழகன், எம்ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் ஒன்றாக சென்றனர். கொறடா உத்தரவை புறம்தள்ளி சட்டசபையில் தவெகவுக்கு ஆதரவு அளித்ததற்கு வருத்தம் கோரி முறைப்படி கடிதம் ஒன்றையும் வழங்கினர்.
பின்னர் தலைமைச் செயலகம் சென்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை இபிஎஸ் தரப்பு கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எஸ்பி வேலுமணி தரப்பு கொறடா சி. விஜயபாஸ்கரும் சந்தித்தனர். இருவர் தரப்பிலும் நடவடிக்கை எடுக்குமாறு ஏற்கனவே அளிக்கப்பட்ட கடிதங்களை திரும்ப பெறுவதாக சபாநாயகரிடம் கூறினர்.
இந் நிலையில், அதிமுக அளித்துள்ள மனுக்கள் மீது ஆய்வு செய்வேன், அதன் முடிவை நாளை அறிவிப்பேன் என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது;
நேற்று 5 பேர் வந்து மனு கொடுத்தனர். அதன் பிறகு ஒருவர் ஒரு மனுகொடுத்தார். இன்றைக்கு ஏற்கனவே மனு அளித்தவர்கள் சார்பில் மனுக்கள் எல்லாம் அளிக்கப்பட்டு இருக்கிறது. அவற்றை எல்லாம் படித்து பார்த்து ஆய்வு செய்து முறையான அறிவிப்பை நாளை(மே 28) காலை நான் வெளியிடுவேன்.
இவ்வாறு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறினார்.