Balan: The Boy
கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படத்துக்குப் பிறகு சிதம்பரம் இயக்கத்தில், பெரிய விளம்பரங்கள் இன்றி திரையரங்குகளில் வெளியாகி தற்போது ஓடிடிக்கு வந்து கவனம் ஈர்த்து வருகிறது ’பாலன்: தி பாய்’
ஒரு சிறுவனின் கலர் பென்சில் வரைபடங்களோடு தொடங்கும் ஆரம்பக் காட்சியே ‘பாலன்’ திரைப்படம் நமக்கு ஓர் இனிமையான அனுபவத்தைத் தரும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. ஆனால், அந்த வரைபடங்கள் ஒரு சிறைச்சாலையின் சுவர்களில், தன் தாயுடன் அடைக்கப்பட்டிருக்கும் ஒரு சிறுவனால் வரையப்பட்டவை என்பதை உணரும் தருணத்தில் படம் கனம் அடைகிறது.
பெயர்களையும், தன் கதைகளையும் மாற்றிக் கொண்டே இருக்கும் பெண், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே துப்பாக்கியால் சுடும் பாட்டி என வழக்கத்துக்கு மாறான விசித்திரமான கதாபாத்திரங்களும் சூழல்களுமே இப்படத்தின் தனித்துவமான களமாக அமைகின்றன.
‘ஜான்-எ-மேன்’ மற்றும் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படங்களுக்குப் பிறகு, இயக்குநர் சிதம்பரம் மீண்டும் தன் திறமையை நிரூபித்துள்ளார். முந்தைய வெற்றிகளின் பாதையைப் பின்பற்றாமல் ஒரு புதிய பாணியை இதில் கையாண்டுள்ளார். திரைக்கதையை ஜீத்து மாதவன் எழுதியுள்ளார்.
ஒரு தாயும் (ஃபர்சானா பழத்திங்கல்) அவரது மகனும் (ஆதிசேஷன் / முகமது சினான்) தங்கள் மோசமான கடந்த காலத்திலிருந்து தப்பிக்க பல்வேறு பெயர்களில், பல ஊர்களில் வாழ்கிறார்கள்.
“என் புதிய பெயர் என்ன, நமது புதிய கதை என்ன?” என்று சிறுவன் தாயிடம் கேட்கும் ஒவ்வொரு முறையும் அவரிடம் புதிய பதில் இருக்கிறது. இவர்கள் தங்களின் பெயர்களை மாற்றி மாற்றி ஓடிக்கொண்டே இருப்பதை படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே மிக நேர்த்தியான மாண்டேஜ் காட்சிகள் நமக்கு அழுத்தமாக உணர்த்தி விடுகிறார் இயக்குநர்.
அந்த சிறுவனின் கூர்மையான பார்வையும், நெருக்கடி நேரங்களில் அவனிடம் தோன்றும் குற்ற மனப்பான்மையின் வெளிப்பாடுகளும் பார்க்கும் நம்மை ஏதோ செய்து விடுகின்றன. ஃபர்சானா பழத்திங்கல் வெளிப்படுத்தும் நுண்ணிய உணர்வுகளும், அவருடைய நடிப்பும் அபாரம், குறிப்பாக பாட்டி கதாபாத்திரத்தில் வருபவருடைய நடிப்பு பாராட்டுக்குரியது.
ஒரு நீடித்த கேமியோவில் வரும் டோவினோ தாமஸ், தனது திரைப்பயணத்திலேயே மிகச் சிறந்த நடிப்பை இதில் வெளிப்படுத்தியுள்ளார் என்று சொன்னாலும் அது மிகையாகாது. சுஷின் ஷ்யாமின் பின்னணி இசை ஒவ்வொரு காட்சியின் தீவிரத்தையும் பார்வையாளர்களுக்குக் கடத்துகிறது.
க்ளைமாக்ஸுக்கு முந்தைய 20 நிமிடங்கள் உணர்வுகளை சுழலச் செய்யும் ஓர் அற்புதமான ரோலர்கோஸ்டர் அனுபவம்.
மற்றபடி, ‘பாலன்' நேர்த்தியாக உருவாக்கப்பட்ட , மலையாள சினிமாவின் மற்றொரு மாயாஜாலம். திரைக்கதை மற்றும் மேக்கிங்கில் ‘பாலன்’ ஒரு மறக்க முடியாத திரை அனுபவம் என்று தாராளமாக சொல்லலாம். ஜீ5 ஓடிடி தளத்தில் தமிழிலும் காணக் கிடைக்கிறது.