📅 Thursday, 01 October 2026 IST | புரட்டாசி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 01, 2026 03:01 PM

Baththa Review: பத்தா விமர்சனம்.. பாத்ரூமுக்குள் அடைபட்ட காட்டு சிங்கம்.. கர்ஜித்ததா? கப்சிப் ஆனதா?

Baththa Review: பத்தா விமர்சனம்.. பாத்ரூமுக்குள் அடைபட்ட காட்டு சிங்கம்.. கர்ஜித்ததா? கப்சிப் ஆனதா?

சென்னை: பிரியா அட்லீ தயாரிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ், சாய், அர்ஜுன் சம்பத், அஜய் கோஷ், பேபி சஹஸ்ரா ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ள பத்தா திரைப்படம் அக்டோபர் 1ம் தேதியான இன்று திரையரங்குகளில் வெளியானது.

சாய் அபயங்கர் இசையில் உருவாகியுள்ள இந்த படம் 80களில் நடக்கும் கதையாக உருவாகியுள்ளது. விஜய் சேதுபதியின் லுக் முதல் படத்துக்கு போடப்பட்டுள்ள 80ஸ் செட் எல்லாமே சிறப்பாக உள்ளது.

படத்தின் மெயின் ஹீரோ என்றால் அது விஜய் சேதுபதியை விட அந்த சபரி கதாபாத்திரத்தில் நடித்த சிறுவன் சாய் தான். படம் முழுக்க அவன் செய்யும் சிறப்பான சம்பவம் தான் ரசிக்க வைக்கிறது. பத்தா படத்தின் கதை, பாசிட்டிவ் மற்றும் மைனஸ் குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..

பத்தா கதை: பத்தா படத்தின் டைட்டிலிலேயே ஒரு தாழ்பாள் இடம்பெற்றுள்ளது. அந்த தாழ்பாள் தான் படத்தின் மையக் கதையே. ஊருக்குள்ள பெரிய டானாக பார்க்கிறவர்களை ஈவு இரக்கமின்றி அடித்து உதைக்கும் பத்தா என்கிற பார்த்தசாரதி கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி மிரட்டியுள்ளார். அவரது மனைவியாக கண்ணிமாவாக லிஜோமோல் ஜோஸ், மகள் தேன்மொழியாக பேபி சஹஸ்ரா நடித்துள்ளனர். அந்த ஏரியாவில் பள்ளியில் 3வது படிக்கும் சபரி கதாபாத்திரத்தில் சாய் எனும் சிறுவன் நடித்துள்ளார்.

போலீஸ் ஸ்டேஷனில் அடைத்தால் அந்த ஸ்டேஷனையே உடைத்துக் கொண்டு வெளியே வரும் அளவுக்கு பெரிய ரவுடி பத்தா என பள்ளியில் குழந்தைகள் பில்டப் கொடுக்க, பத்தா நேரில் அர்ஜுன் சம்பத்தை ரோட்டில் அடிக்கும் காட்சிகளை பார்க்கும் சிறுவன் சபரி ஒரு கட்டத்தில் தன்னை அறியாமல் பத்தாவை பாத்ரூமில் வைத்து பூட்டி விடுகிறான்.

தன்னை பூட்டியது யார் என்று தெரிந்தால், அவங்க குடும்பத்தையே கொன்று விடுவேன் என பத்தா பந்தா காட்ட, சிறுவன் பூட்டிய கதவை திறந்து விடாமல் தெறித்து ஓடுகிறான். சுமார் 8 நாட்கள் பூட்டிய பாத்ரூமில் கிடக்கும் பத்தா அங்கே ஏன் சென்றான்? உயிரோடு வெளியே வந்தானா இல்லையா? அந்த சிறுவனை அவன் என்ன செய்தான்? என்பது தான் பத்தா படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு?: பத்தா கதாபாத்திரத்தில் பெரிய ரவுடி கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி தனது தோற்றத்தையும் உடல்வாகுவையும் பக்காவாக மாற்றி நடித்துள்ளார். மனைவி சமைக்கும் சாப்பாட்டை தூக்கி எறிந்து விட்டு போகும் காட்சியிலும், பசிக்கு பொறை திண்ண வேண்டிய கட்டாயம் வரும் போது தான் மனைவியின் அருமை புரிவது எல்லாம் அழகான நாவலை படித்தது போன்ற உணர்வை கடத்துகிறது.

பத்தா ஏன் ரவுடியாக மாறினான். அவனுடைய மனதில் உள்ள ஆசை என்ன? கிளைமேக்ஸில் அந்த ஆசையை நிறைவேற்ற சபரி என்ன செய்தான் என்கிற கோணத்தில் பத்தாவின் ஃபிளாஷ்பேக் காட்சிகளை எல்லாம் சிறப்பாகவே படமாக்கியுள்ளார் பாலாஜி தரணிதரன்.

பிளஸ்: நீ ஊருக்கே டான் ஆக இருக்கலாம். ஆனால், உன்னை ஒரு சிறுவன் பெட்டிப் பாம்பாக அடக்கி வைத்து விடுவான். வல்லவனுக்கு வல்லவன் இந்த வையத்தில் உண்டு என்பதை உணர்த்தும் வகையில் இந்த படத்தின் கதை உள்ளது. விஜய் சேதுபதி மற்றும் அந்த சிறுவன் சாய் இடையேயான காட்சிகள் தான் படம் முழுக்க என்றாலும் அதை போர் அடிக்காமல் படமாக்கிய விதம் தான் இந்த படத்தை பார்க்க வைக்கிறது. 80ஸ் காலக்கட்டத்தை காட்ட போடப்பட்ட செட்கள் எல்லாம் கலை இயக்குநர் கண்ணனின் கை வண்ணத்தைக் காட்டுகிறது. சாய் அபயங்கர் படத்துக்கு பெரிய பிளஸ் ஆக உள்ளார். சிறுவன் பத்தாவை பூட்டி விடுவதும், பூட்டியது தான் என்பதை கண்டுபிடிக்க மற்றவர்கள் முயற்சிக்கும் போது அவன் கொடுக்கும் ரியாக்‌ஷன்களும் அதற்கான பின்னணி இசையும் படத்தை கை தூக்கி நிறுத்துகிறது. செல்வகுமாரின் ஒளிப்பதிவு படத்துக்கு தேவையான அளவுக்கு உள்ளது.

மைனஸ்: ஒரு சாதாரண குறும்படக் கதையை எடுத்துக் கொண்டு முழு நீள படமாக இயக்குநர் பாலாஜி தரணிதரன் நீட்டி முழங்கியதும் இடைவேளைக்குப் பிறகு அந்த இடத்திலேயே படம் சுற்றிக் கொண்டு கடைசி வரை சென்றதும் சற்றே சலிப்பை ஏற்படுத்துகிறது. அந்த பாத்ரூமுக்கு விஜய் சேதுபதி சென்றது ஏன் என்கிற காரணம் பெரிதாக ஒர்க்கவுட் ஆகவில்லை. பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் படத்தை பார்த்தால் ஒரு ஓகே ரகமான படமாகவே இந்த பத்தா உள்ளது.