📅 Monday, 05 October 2026 IST | புரட்டாசி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 05, 2026 12:04 PM

செம்பவாங் தீயை அணைத்த துணிச்சலான சிறுவர்களுக்குப் பாராட்டு

செம்பவாங் தீயை அணைத்த துணிச்சலான சிறுவர்களுக்குப் பாராட்டு

புளோக் 354B அட்மிரல்டி டிரைவில் உள்ள மறுசுழற்சித் தொட்டியில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 4) இரவு ஏற்பட்ட தீயைச் சிறுவர்கள் இருவர் துணிச்சலுடன் செயல்பட்டு அணைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு 8.20 மணியளவில் தீப்பற்றியதாகவும் அங்கு வந்த நீல நிறச் சட்டையணிந்த சிறுவனும் அவனுடன் வந்த மற்றொரு சிறுவனும் அருகிலிருந்த தீயணைப்புக் கருவிகளைக் கொண்டு தீயை அணைத்ததாக ஏஷியாஒன் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இச்சம்பவத்தைப் பார்த்த ஒருவர், அதனைக் காணொளியாகப் பதிவுசெய்து ‘வேக் அப் சிங்கப்பூர்’ இன்ஸ்டகிராம் பக்கத்திற்கு அனுப்பி அச்சிறுவர்களைப் பாராட்டினார். அது பெரிய தீ என்றும் சிறுவர்கள் விரைந்து செயல்பட்டுத் தீயை அணைத்தனர் என்றும் அவர் தமது பதிவில் குறிப்பிட்டிருந்தார். சம்பவ இடத்துக்கு எதிரில் இருந்த புளோக்கின் ஐந்தாம் தளத்திலும் தாம் புகையைச் சுவாசிக்க நேரிட்டதாக அவர் பதிவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் தெரிவித்துவிட்டதாகவும் பெயர் வெளியிட விரும்பாத அந்த இணையவாசி தெரிவித்திருந்தார்.

தீயணைப்பாளர்கள் செல்லுமுன்பே சிறுவர்கள் திறம்படத் தீயை அணைத்துவிட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படை உறுதிப்படுத்தியது.

தரைத் தளத்தில் நடந்த இச்சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.