சென்னை சேப்பாக்கத்தில் இஷான் கிஷன் டபுள் செஞ்சுரி.. 26 ஃபோர் அடித்து துலீப் டிராபியில் சரவெடி
சென்னை சேப்பாக்கத்தில் இஷான் கிஷன் டபுள் செஞ்சுரி.. 26 ஃபோர் அடித்து துலீப் டிராபியில் சரவெடி
சென்னை: 2026 துலீப் டிராபி இறுதிப் போட்டியில் கிழக்கு மண்டல அணியின் கேப்டன் இஷான் கிஷன் ருத்ரதாண்டவம் ஆடியுள்ளார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தென் மண்டல அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில், இஷான் கிஷன் இரட்டைச் சதம் விளாசி மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளைச் சிதறடித்தார்.
இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் கம்பேக் கொடுக்கத் துடிக்கும் இஷான் கிஷன், தென் மண்டல அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். அவர் வெறும் 273 பந்துகளில் 26 பவுண்டரிகள் மற்றும் 2 பிரம்மாண்ட சிக்சர்களுடன் இரட்டை சதம் கடந்தார். அவரது இந்த அதிரடி ஆட்டத்தால் இரண்டாம் நாள் ஆட்டத்தின் இரண்டாவது பகுதி முடிவில், கிழக்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 122 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 555 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது.
கிழக்கு மண்டல அணிக்கு துவக்க வீரர்களாக களம் இறங்கிய வைபவ் சூர்யவன்ஷி 44 ரன்களும், அபிமன்யு ஈஸ்வரன் 72 ரன்களும் எடுத்து சிறப்பான துவக்கம் அளித்தனர். தொடர்ந்து வந்த ஷிகர் மோகன் 85 ரன்கள் குவித்து அசத்தினார். 4 விக்கெட்டுகளை இழந்து அணி தடுமாறிய போது கேப்டன் இஷான் கிஷன், குமார் குஷாக்ராவுடன் ஜோடி சேர்ந்தார்.
அபாரமாக விளையாடிய குமார் குஷாக்ரா 132 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்களுடன் 101 ரன்கள் எடுத்து சதம் விளாசினார். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 230 ரன்கள் குவித்து தென் மண்டல பந்துவீச்சாளர்களைக் கதறவிட்டது. அதன்பின் வந்த அனுகுல் ராய் 30 ரன்களுடன் தொடர்ந்து களத்தில் இருந்தார்.
தென் மண்டல அணியின் முன்னணி பந்துவீச்சாளரான முகமது சிராஜ் 21 ஓவர்கள் வீசி விக்கெட் ஏதுமின்றி 118 ரன்களை வாரி வழங்கினார். ஸ்ரேயாஸ் கோபால் 119 ரன்களைக் கொடுத்து விக்கெட் எடுக்க முடியாமல் திணறினார். இஷான் கிஷனின் இந்த சரவெடி இரட்டைச் சதம், தேர்வுக்குழுவுக்கு அவர் அனுப்பிய அதிரடியான செய்தியாகப் பார்க்கப்படுகிறது. சேப்பாக்கம் மைதானமே இஷான் கிஷனின் இந்த மாஸ் ஆட்டத்தால் அதிர்ந்து போயுள்ளது.