📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 24, 2026 01:02 PM

சென்னையில் 265 பவுன் தங்க நகை மோசடி

சென்னையில் 265 பவுன் தங்க நகை மோசடி

சென்னையில் 265 பவுன் தங்க நகை மோசடி - மேற்கு வங்கத்தில் பதுங்கிய நபர் கைது

நகை மோசடியில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான பிரபாத்தை தேடும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Published : July 24, 2026 at 11:32 AM IST

சென்னை: செளகார்பேட்டை பகுதியில் உள்ள தங்க நகைக் கடைகளில் இருந்து 265 சவரன் தங்க நகைகளை வாங்கி சென்று மோசடியில் ஈடுபட்ட புத்ததேவ் புனியா என்பவரை மேற்கு வங்கத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை செளகார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நரேந்தர் (வயது 54). இவர் என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள தனலட்சுமி வணிக வளாகத்தின் முதல் மாடியில் மொத்த தங்க நகைக் கடை நடத்தி வருகிறார். அதே வளாகத்தின் இரண்டாவது மாடியில் மகாவீர் மேத்தா என்பவரும் மொத்த தங்க நகைக் கடை நடத்தி வருகிறார்.

இவர்கள் இருவரிடமும் கடந்த சில ஆண்டுகளாக சென்னை சூளைமேடு பகுதியில் நகைப்பட்டறை நடத்தி வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரபாத் என்பவர் தங்கக் கட்டிகளை வாங்கி நகைகளை தயாரித்து கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஜூலை 16 ஆம் தேதி பிரபாத், தங்க வியாபாரிகளான நரேந்தர் மற்றும் மகாவீர் மேத்தா ஆகியோரை செல்போனில் தொடர்பு கொண்டு தனக்கு தெரிந்த நகை வியாபாரி ஒருவருக்கு தங்க நகைகள் அவசரமாக தேவைப்படுவதாகவும், அதற்கான தங்கக் கட்டிகளை விரைவில் தான் தந்து விடுவதாகவும், அதற்காக புத்தா என்பவரை அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரபாத் கூறியதை நம்பிய நரேந்தர், தனது கடையில் இருந்து 1400 கிராம் தங்க நகைகளையும், மகாவீர் மேத்தா தனது கடையில் இருந்து 726 கிராம் தங்க சங்கிலியையும் புத்தா என்பவரிடம் ஒப்படைத்துள்ளனர். நரேந்தர் மற்றும் மகாவீர் மேத்தா ஆகிய இருவரிடமிருந்தும் மொத்தமாக 2,126 கிராம் அதாவது 265 சவரன் தங்க நகைகளை பெற்றுக் கொண்டு புத்தா அங்கிருந்து சென்றுள்ளார்.

இதையடுத்து, ஜூலை 17 ஆம் தேதி பிரபாத் மற்றும் புத்தாவை தொடர்பு கொள்ள முயன்ற போது, இருவரின் செல்போன்களும் அணைக்கப்பட்டிருந்ததுடன், சூளைமேட்டில் இருந்த பிரபாத்தின் நகைப்பட்டறையும் பூட்டப்பட்டு இருந்தது. அப்போது தான், தாங்கள் ஏமாற்றப்பட்டதை தங்க நகைக் கடைகளின் உரிமையாளர்கள் அறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து, நரேந்தர் மற்றும் மகாவீர் மேத்தா ஆகிய இருவரும் சென்னை யானைகவுனி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகாரளித்தனர். இதன் அடிப்படையில் குற்றப்பிரிவு காவல் துறையினர் இரு பிரிவுகளின் கீழ் மோசடி வழக்குகளை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி அதிநவீன தொழில்நுட்ப உதவிகளுடன், நகைகளை வாங்கி சென்ற புத்ததேவ் புனியா (வயது 29) மேற்கு வங்க மாநிலம் மிட்னாபூரில் தலைமறைவாக இருப்பதை கண்டறிந்தனர்.

தொடர்ந்து, காவல் உயரதிகாரிகளின் அனுமதியுடன் மேற்கு வங்கத்திற்கு சென்ற தனிப்படை காவல்துறையினர், மிட்னாபூர் காவலர்கள் உதவியுடன் கடந்த ஜூலை 21 ஆம் தேதி புத்ததேவ் புனியாவை கைது செய்தனர். கைது செய்த அவரை அங்குள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல் துறையினர், சட்ட நடைமுறைகளை பின்பற்றி சென்னைக்கு அழைத்து வந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணைகளுக்கு பின்னர் புத்ததேவ் புனியாவை சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய குற்றவியல் காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவுப்படி அவரை சிறையில் அடைத்தனர். மேலும், இந்த நகை மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளியான பிரபாத்தை கைது செய்ய சென்னை காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.