📅 Monday, 19 October 2026 IST | ஐப்பசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 19, 2026 01:03 PM

சென்னையில் மழைநீர் தேங்கிய 35 இடங்களிலும் தண்ணீர் அகற்றம்: முதல்வர் விஜய் ஆய்வு

சென்னையில் மழைநீர் தேங்கிய 35 இடங்களிலும் தண்ணீர் அகற்றம்: முதல்வர் விஜய் ஆய்வு

சென்னை, அக். 19:

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து முதல்வர் சி. ஜோசப் விஜய் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தைப் பார்வையிட்ட முதல்வர், மழை அளவு, சுரங்கப்பாதைகள், கால்வாய்கள், ஆறுகளின் முகத்துவாரங்களில் மேற்கொள்ளப்படும் கண்காணிப்புப் பணிகள் மற்றும் பொதுமக்களின் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.கடந்த 17-ம் தேதி இரவு பெய்த கனமழையில் பாரிமுனையில் 36 செ.மீ., கத்திவாக்கத்தில் 34 செ.மீ., மணலி மற்றும் எண்ணூரில் தலா 21 செ.மீ. மழை பதிவானது. குறுகிய நேரத்தில் பெய்த கனமழையால் மாநகராட்சிப் பகுதிகளில் 35 இடங்களில் மழைநீர் தேங்கியது. மாநகராட்சி சார்பில் ஏற்கெனவே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீர் அகற்றப்பட்டு, அனைத்து இடங்களிலும் மழைநீர் தேக்கம் சரிசெய்யப்பட்டது.மழையால் 22 இடங்களில் சாலைகளில் விழுந்த மரங்கள் மற்றும் மரக்கிளைகள் உடனடியாக அகற்றப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. மாநகராட்சியின் 22 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் அகற்றப்பட்டு போக்குவரத்து தடையின்றி நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களைத் தங்க வைப்பதற்காக 227 தற்காலிக நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மழைநீர் தேங்கிய சில பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு நேற்று காலை 13,500 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக 1,189 வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மழைநீரை வெளியேற்ற மாநகராட்சியின் 676 மோட்டார் பம்புகள், வாடகைக்கு பெறப்பட்ட 100 குதிரைத்திறன் கொண்ட 134 மோட்டார் பம்புகள், 648 டிராக்டர்களில் பொருத்தப்பட்ட பம்புகள் மற்றும் 109 நீர் சேகரிப்புத் தொட்டிகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், மாநகராட்சியின் 36 படகுகள், மீன்வளத் துறையின் 97 படகுகள் மீட்புப் பணிகளுக்காக வைக்கப்பட்டுள்ளன.மரங்களை அகற்றுவதற்கான இயந்திரங்கள், 112 மைய சமையல் கூடங்கள் மற்றும் உணவுப் பொருட்களும் தயார் நிலையில் உள்ளன.தற்போது விடுக்கப்பட்டுள்ள அதிகனமழை எச்சரிக்கையை முன்னிட்டு, அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின்போது அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மு. சாய்குமார், மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.