செந்தில் பாலாஜியிடம் காவல்துறை இரண்டு மணி நேரம் விசாரணை
சென்னை: கைதுக்கு அஞ்சி தலைமறைவானதாகக் கூறப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, திருவல்லிக்கேணி காவல்நிலையத்திற்கு சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) வந்தார்.
தவெக எம்எல்ஏவிடம் ரூ.35 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் செந்தில் பாலாஜிக்கும் அவரது தம்பி அசோக்குமாருக்கும் நிபந்தனையுடன் முன்பிணை வழங்கப்பட்டது.
அதன்படி, இருவரும் தினமும் காலையிலும் மாலையிலும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தனர்.
இந்நிலையில், டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் புதிய வழக்கைப் பதிவு செய்தனர். அதன் பிறகு இரு நாள்களாக அவர் கையெழுத்திட காவல் நிலையம் வரவில்லை.
கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் அவர் வரவில்லை என்று கூறப்பட்டது.
இதற்கிடையே, டாஸ்மாக் முறைகேடு வழக்கில் செந்தில் பாலாஜிக்கு முன்பிணை வழங்கிய உச்ச நீதிமன்றம் அவரைக் கைது செய்யவும் தடை விதித்தது.
அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை செந்தில் பாலாஜியும் அவரது தம்பியும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டனர்.
அப்போது காவல்துறை அதிகாரிகள் அந்த இருவரிடமும் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
விசாரணை முடிந்து வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, “தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கு தொடர்பான புகாரிலும் முதல் தகவல் அறிக்கையிலும் எனது பெயர் இல்லை. பின்னர், எந்த முகாந்திரமும் இல்லாமல் எனது பெயர் சேர்க்கப்பட்டது.
“டாஸ்மாக் முறைகேடு வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில், அதே புகாரின் அடிப்படையில் ஊழல் தடுப்புத் துறை புதிய வழக்குப் பதிவு செய்துள்ளது. எனவே, இந்த வழக்கு நிலைக்காது.
“எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் அவற்றைச் சட்டப்படி எதிர்கொண்டு, அவை பொய்யானவை என்பதை நிரூபிப்போம்,” என்றார்.