📅 Monday, 21 September 2026 IST | புரட்டாசி 5, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil September 21, 2026 02:03 PM

சிங்கப்பூர் ஆட்குறைப்பு: ஊழியர்ச் சந்தையில் என்ன நடக்கிறது?

சிங்கப்பூர் ஆட்குறைப்பு: ஊழியர்ச் சந்தையில் என்ன நடக்கிறது?

சிங்கப்பூரில் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் ஆட்குறைப்பு விகிதம் அதிகரித்துள்ள நிலையில் வேலைவாய்ப்புகள் விகிதம் சரிந்துள்ளது.

இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் ஆட்குறைப்பு செய்யப்பட்டோர் எண்ணிக்கை 4,620ஐ எட்டியது. அது, கொவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்தின்போது, 2020ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்குப் பிறகு பதிவான ஆக அதிக எண்ணிக்கை.

அப்படியென்றால் ஒவ்வோர் 1,000 ஊழியர்களில் ஆட்குறைப்பு செய்யப்பட்டோர் விகிதம் கிட்டத்தட்ட இரண்டாக இருந்தது. முதலாம் காலாண்டில் அந்த விகிதம் 1.6ஆக இருந்தது. அப்போது 3,830 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர்.

உற்பத்தி, தகவல், தொடர்புகள், நிதிச் சேவைகள் ஆகிய ஏற்றுமதி சார்ந்த துறைகளின் வர்த்தகங்களில் ஏற்பட்ட மறுசீரமைப்புகள் காரணமாக ஆட்குறைப்பு விகிதம் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.

சிங்கப்பூரின் ஊழியர்ச் சந்தையில் தளர்வுக்கான அறிகுறிகள் தெரிவதாக மனிதவள அமைச்சு திங்கட்கிழமை (செப்டம்பர் 21) வெளியிட்ட ஊழியரணி அறிக்கை குறிப்பிட்டது.

இவ்வாண்டின் இரண்டாம், மூன்றாம் காலாண்டுகளில் அதிகரித்துள்ள ஆட்குறைப்பு விகிதம் கவனிக்கத்தக்கது என்றபோதும் அது நீடிக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என்றார் மனிதவள அமைச்சின் ஆராய்ச்சி, புள்ளிவிவரப் பிரிவு இயக்குநர் ஆங் பூன் ஹெங்.

பல்வேறு துறைகளில் ஆட்குறைப்பு விகிதம் அதிகரிக்காமல் ஏற்றுமதி சார்ந்த துறைகளில் மட்டுமே அது கூடியது என்று அவர் சுட்டினார்.

ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்களும் புதிய வேலைகளைத் தேடிக்கொள்ள கூடுதல் காலம் எடுத்துக்கொண்டதாகத் தெரியவந்துள்ளது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஆறு மாதங்களுக்குள் புதிய வேலைகளில் பணியமர்த்தப்பட்டோர் விகிதம் இரண்டாம் காலாண்டில் 54.9 விழுக்காடாகப் பதிவானது. முதல் காலாண்டில் அது 60.7 விழுக்காடாக இருந்தது.

எனினும், ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்களில் கிட்டத்தட்ட 70 விழுக்காட்டினரால் ஓராண்டுக்குள் புதிய வேலைகளைத் தேடிக்கொள்ள முடிந்தது.

“அடுத்த பணிக்கு மாறுவதற்குச் சற்று கூடுதல் காலம் எடுப்பதாக ஒருசில ஊழியர்கள் உணர்கிறார்கள். அது, சிங்கப்பூரர்கள் சிலருக்குக் கவலையளிக்கும் விவகாரமாக உள்ளது. நிச்சயமாகத் தற்போது வேலை வாய்ப்புகள் உள்ளன. ஆனால், ஒரு வேலையிலிருந்து மற்றொரு வேலைக்கு மாறுவது சவாலாக இருக்கும்,” என்றார் தற்காலிக மனிதவள அமைச்சர் ஜேஸ்மின் லாவ்.

ஊழியர்கள் புதியவற்றைக் கற்றுக்கொள்ளவும் தங்களைத் தகவமைத்துக் கொள்ளவும் அரசாங்கம் ஆதரவளிக்கும் என்ற அவர், புதிய வேலைப் பொறுப்புகளுக்குத் தயாராகவும் உதவி வழங்கப்படும் என்றார்.