சிங்கப்பூர் ஏற்றுமதி எதிர்பார்ப்புகளைக் கடந்து வளர்ச்சி
செயற்கை நுண்ணறிவு, மின்னணு அல்லாத பொருள்களின் ஏற்றுமதி கூடியதால் செப்டம்பர் மாதத்தில் சிங்கப்பூரின் எண்ணெய் சாரா ஏற்றுமதி எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் அதிகமாக வளர்ச்சி கண்டது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பப் பிரிவின் வலுவான தேவை காரணமாக மின்னணுப் பொருள்களின் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரிக்கிறது.
ஆகஸ்ட் மாத வளர்ச்சியைத் தொடர்ந்து செப்டம்பரிலும் அது நீடித்தது. அந்த வளர்ச்சி தொடர்ந்து ஏழாவது மாதமாக ஈரிலக்கத்தில் பதிவானது.
இது புளூம்பெர்க் கருத்துக்கணிப்பில் பொருளியல் நிபுணர்கள் கணித்திருந்த 32.2 விழுக்காட்டு வளர்ச்சியைவிட அதிகமாகும்.
2025ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த செப்டம்பர் வளர்ச்சி 68.4 விழுக்காட்டுக்கு அதிகரித்ததைக் காணலாம்.
ஆகஸ்ட் மாதத்தில் வளர்ச்சி விகிதம் 46.1 விழுக்காடாக இருந்தது.
இந்தத் தகவல்களை என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) தனது புள்ளிவிவர அறிக்கையில் குறிப்பிட்டது.
மின்னணு அல்லாத பொருள்களின் ஏற்றுமதி, ஆகஸ்ட் மாதத்தின் 11.9 விழுக்காட்டு உயர்வைத் தொடர்ந்து, செப்டம்பர் மாதத்தில் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 54.2 விழுக்காடு விரிவடைந்தது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
அதனுடன், நாணயம் அல்லாத தங்கத்தின் ஏற்றுமதி 124.3 விழுக்காடு என்னும் மாபெரும் வளர்ச்சியும் இணைந்து ஒட்டுமொத்த எண்ணெய் சாரா ஏற்றுமதியை உயர்த்திவிட்டது.
மின்னணுத் தயாரிப்புகளின் ஏற்றுமதி ஆகஸ்ட் மாதத்தின் 131.6 விழுக்காட்டு உயர்வைத் தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் 107.6 விழுக்காடு வளர்ச்சி கண்டது.
வலுவான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் தேவை தொடர்வது அந்த ஏறுமுகத்திற்கு முக்கியக் காரணம்.
கணினி ஏற்றுமதியில் ஏற்பட்ட 149.5 விழுக்காட்டு வளர்ச்சியும் அதற்குக் கைகொடுத்தது.
‘டிஸ்க் மீடியா’ தயாரிப்புகளின் ஏற்றுமதி 312.4 விழுக்காடாகவும் நுண்சில்லுகள் மற்றும் சில்லுகளின் ஏற்றுமதி 74.7 விழுக்காடாகவும் அதிகரித்தன.
அமெரிக்கா, தைவான், ஹாங்காங் போன்றவற்றுக்கான ஏற்றுமதி செப்டம்பரில் விரிவடைந்தது. அதே வேளை, இந்தியாவிற்கான ஏற்றுமதி குறைந்தது.