📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil May 28, 2026 02:00 AM

சிங்கப்பூர் பங்குச்சந்தையால் தடைசெய்யப்படும் நிறுவனங்களுக்கு மூன்றாண்டு அவகாசம்

சிங்கப்பூர் பங்குச்சந்தையால் தடைசெய்யப்படும் நிறுவனங்களுக்கு மூன்றாண்டு அவகாசம்

விதிமீறல் காரணமாக சிங்கப்பூர் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்வதிலிருந்து தற்காலிகமாகத் தடைசெய்யப்பட்ட நிறுவனங்கள் அவற்றின் அடிப்படைப் பிரச்சினைகளை மூன்றாண்டுகளுக்குள் தீர்த்துக்கொள்ள வேண்டும் என பங்குச்சந்தையின் ஒழுங்குமுறைப் பிரிவான ’ரெக்கோ’ (Regco) தெரிவித்துள்ளது.

தற்காலிகத் தடைகளை தேவைப்படும் அளவுக்குக் குறைவாக வைத்திருக்க அந்தப் பிரிவு முயன்றுவரும் சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நீண்டகாலத்திற்குத் தற்காலிகத் தடையில் உள்ள நிறுவனங்கள், மூன்று ஆண்டுகளுக்குள் தங்கள் பிரச்சினைகளுக்கு உறுதியான தீர்வை எட்டமுடியும் என்பதை அதன் தரவுகள் தெரிவித்துள்ளன.

அந்த கால அவகாசத்திற்குள் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளாத நிறுவனங்கள், பங்குச்சந்தைப் பட்டியலிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதே தற்போதைய நடைமுறை என்பதை ஒழுங்குமுறைப் பிரிவு விளக்கி உள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இடைநீக்கம் செய்யப்பட்ட நிறுவனங்கள், நிலுவையில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வெளிப்படுத்த வேண்டும்.

அத்துடன், வர்த்தகத்தை மீண்டும் தொடங்குவதற்கான உறுதியான திட்டங்களையும் அவை முன்வைக்க வேண்டும்.

அதில் முன்னேற்றம் இல்லாதபோதும் விரைவாகச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான அறிகுறி காணப்படாதபோதும் பட்டியலிலிருந்து அத்தகைய நிறுவனங்களை நீக்குவதற்கான நடவடிக்கை தொடங்கப்படும் என்றும் ‘ரெக்கோ’ கூறியுள்ளது.