📅 Monday, 12 October 2026 IST | புரட்டாசி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health October 12, 2026 05:04 PM

சிங்கப்பூர் உணவு நன்கொடை இயக்கம்: ஏ ஃபுல் பிளேட்

சிங்கப்பூர் உணவு நன்கொடை இயக்கம்: ஏ ஃபுல் பிளேட்

சிங்கப்பூரின் மிகப் பெரிய உணவு நன்கொடை இயக்கம் தற்போது தொடங்கி டிசம்பர் 13 வரை நடைபெறவுள்ளது.

இதன் தொடர்பில், தேவைப்படும் சமூகங்களுக்குச் சத்தான மளிகைப் பொருள்களும் சூடான உணவும் வழங்குவதற்கு நிதியுதவி அளிக்குமாறு சிங்கப்பூரர்களை ஃபேர்பிரைஸ் குழுமம் ஊக்குவித்து வருகிறது.

‘ஏ ஃபுல் பிளேட்’ இயக்கம் எனும் அது தற்போது மூன்றாவது ஆண்டாக நடத்தப்படுகிறது. இங்குள்ள 21 சமூக, அறநிறுவனப் பங்காளித்துவ அமைப்புகள் மூலம் கிட்டத்தட்ட 600,000 பேருக்கு ஆதரவளிப்பதை இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஃபேர்பிரைஸ் குழுமம் திங்கட்கிழமை (அக்டோபர் 12) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

புதிய மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புக்கு அல்லது சூடான உணவுக்கு நிதியுதவி அளிப்பதன் மூலம் சிங்கப்பூரர்கள் இதில் பங்களிக்கலாம்.

இதில் பங்கேற்கும் ஃபேர்பிரைஸ் பேரங்காடிகள், ஃபேர்பிரைஸ் ஃபைனஸ்ட், ஃபேர்பிரைஸ் எக்ஸ்ட்ரா, ஃபேர்பிரைஸ் எக்ஸ்பிரஸ், சியர்ஸ், யூனிட்டி மருந்தகங்கள், ஃபேர்பிரைஸ் ஆன்லைன், ‘எஃப்பிஜி’ செயலி முதலியவற்றின் பணம் செலுத்தும் பகுதிகளில் $10, $30, $50 அல்லது $100ஐ வாடிக்கையாளர்கள் நன்கொடையாக வழங்கலாம்.

அதேவேளையில், $2, $3 அல்லது $5 விலையிலான சூடான உணவு அல்லது பானங்கள் அடங்கிய தொகுப்புக்கு நிதியுதவி அளிக்க விரும்புவோர், இதில் பங்கேற்கும் கோப்பித்தியாம், பாகூஸ் உணவுக்கூடங்களில் பணம் செலுத்தும் இடங்களில் அதைச் செய்யலாம். ஃபேர்பிரைஸ் குழுமத்தின் ஃபேர்பிரைஸ் அறநிறுவனம், புதிய மளிகைப் பொருள்கள், சூடான உணவுப் பற்றுச்சீட்டுகளுக்காக $1 மில்லியனை வழங்கி இந்த இயக்கத்திற்கு உறுதுணையாக இருக்கும்.

உட்லண்ட்ஸ் சமுதாய நிலையத்தின் மூலம் பயன்பெற்றவரான எஸ்தர் யூங் கூறுகையில், இந்த இயக்கத்தின் மாதாந்தர உணவுப் பொட்டலங்கள் தமது குழந்தைகளுக்கு முறையான புதிய பழங்களும் காலை உணவாகத் தானியங்களும் பாலும் கிடைக்க உதவுகின்றன என்றார்.

“அவர்கள் சத்தான, விதவிதமான உணவை உண்ண முடிகிறது என்பதை அறிவது எனக்கு மன அமைதியைத் தருகிறது,” என்று அவர் கூறினார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

சத்தான உணவு கிடைப்பது போன்ற எளிய அம்சம்கூட மக்களின் வாழ்க்கையில் எவ்வாறு அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த இயக்கம் காட்டியிருப்பதாகச் சொன்னார் ஃபேர்பிரைஸ் குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி விபுல் சாவ்லா.

“ஃபேர்பிரைஸ் அறநிறுவனத்தின் மூலம், இந்த ஆதரவைத் தொடர்ந்து வழங்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம். தொடர்ந்து, சிங்கப்பூரர்கள் பலர் தங்களால் முடிந்த வழியில் மாற்றத்தை ஏற்படுத்த எங்களுடன் இணைவார்கள் என்று நம்புகிறோம்,” என்றார் அவர்.

2024ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல், தேவைப்படும் சமூகங்களுக்கு உணவும் ஊட்டச்சத்தும் வழங்குவதற்காக ‘ஏ ஃபுல் பிளேட்’ இயக்கம் $3 மில்லியனுக்கும் அதிகமான தொகையைத் திரட்டியுள்ளது.

புதிய புரதச்சத்து, பழங்கள், காய்கறிகளைப் பெறுவதில் வசதி குறைந்த குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்களை சுட்டிக்காட்டிய ‘ஏ ஃபுல் பிளேட்’ ஆய்வின் கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து இந்த இயக்கம் தொடங்கப்பட்டது.