📅 Tuesday, 15 September 2026 IST | ஆவணி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology September 15, 2026 06:34 PM

சிங்கப்பூரில் கூகல் ஆட்சேர்ப்பு: AI

சிங்கப்பூரில் கூகல் ஆட்சேர்ப்பு: AI

தொழில்நுட்ப வல்லுநர்கள் செய்து வரும் பணிகளில் பெரும்பாலானவற்றைச் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தானியக்கமயமாக்கினாலும், திறமைமிக்க தொழில்நுட்பப் பணியாளர்களுக்கான தேவை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில், சிங்கப்பூரில் பொறியாளர்களை வேலைக்கு எடுப்பதை கூகல் நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது.

செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 15) கூகல் கிளவுட் சிங்கப்பூர் பொறியியல் நிலையத்தின் முதல் பகுதி அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டது. அதற்காக அந்நிறுவனம் ஆறு மாதங்களுக்கும் குறைவான காலத்தில் 85க்கும் மேற்பட்ட நிபுணர்களை வேலைக்கு எடுத்துள்ளது.

புதிய நிலையம், ‘கூகல் டீப்மைண்ட்’டின் (Google DeepMind) ஏஐ ஆராய்ச்சி ஆய்வகம் இருக்கும் இடத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகம் 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திறக்கப்பட்டது.

உள்ளூர், அனைத்துலகப் பயன்பாட்டிற்கான தீர்வுகளைச் சிங்கப்பூரிலேயே உருவாக்க இந்த நிலையம் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஏஐ ஆராய்ச்சியாளர்கள், மென்பொருள் பொறியாளர்கள், வாடிக்கையாளர்களை நேரில் சந்திக்கும் பொறியாளர்கள் ஆகியோரை இந்த நிலையம் ஒன்றிணைக்கிறது.

இவ்வாண்டு பிப்ரவரி மாதம் கூகல் வெளியிட்ட அறிக்கையின்படி, 150க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப அந்நிறுவனம் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அந்தத் திட்டத்தின் தொடர்ச்சியாகவே தற்போதைய இந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

“கூகல் நிறுவனம், புதிய பொறியியல் நிலையத்திற்குப் பணியாளர்களை வேகமாக நியமித்தது. அதற்கு முக்கியக் காரணம் சிங்கப்பூரில் ஆரம்பக்கட்டப் பணியாளர்கள் முதல் அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் வரை திறமைமிக்க மனிதவளம் வலுவாக இருப்பதுதான்,” என்றார் தொழில்நுட்பம், வாடிக்கையாளர் பொறியியல் பிரிவின் துணைத் தலைவர் மோ அப்துல்லா.

திறமையாளர்கள் இங்கு அதிக அளவில் உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

திரு அப்துல்லா, கூகல் நிறுவனத்தில் பணிபுரிவதற்காக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவிலிருந்து சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்தார்.

“கூகலில் வேலை கிடைப்பது என்பது எளிதல்ல, ஆட்சேர்ப்பின் போது வேலையின் தகுதிக்கான தரத்தைக் குறைத்துக்கொள்ளவில்லை. நாங்கள் மிகவும் கடுமையான தேர்வு முறையைப் பின்பற்றுகிறோம்,” என்று அப்துல்லா கூறினார்.

சிங்கப்பூரில் உள்ள கூகல் நிறுவனத்தில் 3,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

சிங்கப்பூரில் கூகலின் நிகர வேலைவாய்ப்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாகவும், அந்தப் புதிய சேர்க்கைகளில் சிங்கப்பூர் பொறியியல் நிலையம் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.